பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை, திருநீறு பட்டை, ருத்திராட்ச மாலை அணிவித்தது போன்ற படம் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே வல்லம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சாணம் பூசி அவமதித்தனர். திருவள்ளுவர் சிலை அவமதிப்பு மற்றும் திருவள்ளுவரை காவி அடையாளம் பூசுவது போன்ற நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சியினரும், தமிழ் அறிஞர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் வல்லம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இன்று காலை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் காவி துண்டு அணிவித்து, ருத்திராட்ச மாலை அணிவித்து சூடம் ஏற்றினார். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் சம்பவஇடத்திற்கு வந்த காவல்துறையினர் திருவள்ளுவர் சிலையின் மீது போடப்பட்ட காவித்துண்டையும் ருத்திராட்ச மாலையையும் அகற்றி உள்ளார். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.