தஞ்சாவூர், ஏப்.2- தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நடராஜனுக்கு வாக்கு கேட்டு முதல்வர் எடப்பாடி, ஒரத்தநாட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது வேன் பின்புறம் மர்ம நபர் செருப்பை வீச, அது வேனின் பின்புறம் கிடந்தன.இதை பார்த்த கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அங்கிருந்த காவல்துறையினர், செருப்பு வீசியதுயார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். ஆனால் பிரச்சாரம் முடியும் வரை அந்த செருப்பை யாரும் எடுத்து கீழே போடவில்லை. செருப்பு வீசப்பட்ட இடமான ஒரத்தநாடு முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்டச் செயலாளரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.வைத்திலிங்கத்தின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோவுக்கு ஓட்டு கேட்ட முதல்வர்
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் தமாகாவைச் சேர்ந்த என்.ஆர்.நடராஜனுக்கு ஆட்டோ ரிக்சா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி,ஆட்டோவுக்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார். கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த மூதாட்டிகள், “என்னஇது ரெட்ட எலக்காரங்க கூட்டி வந்தாங்க. இங்க வந்தா ஆட்டோ ரிக்சாவுக்கு ஓட்டு கேக்குறாங்க” என்றவாறு கலைந்துசென்றனர்.