கும்பகோணம், டிச.17- மத்திய அரசினால் கொண்டு வரப்பட்டுள்ள மக்கள் விரோத குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் கும்பகோணத்தில் அரசு ஆடவர் கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் விக்னேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. நகர குழு உறுப்பினர் மகாராஜா, அரு ண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன் கண்டன உரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராள மான மாணவர்கள் கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதே போல் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் போராட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்க கிளைத்தலைவர் வீரமுத்து தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் அருண்குமார், சிரில் இமான், ராஜாராம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாணவ, மாணவிகள் சாலை மறியல் செய்வதற்காக கல்லூரி வாயிலை விட்டு வெளியே வந்தனர். அப்போது காவல்துறையினர் மாணவர்களைத் தடுத்தனர். இருந்தும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் மாண வர்களை தடி கொண்டு விரட்டிக் கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.