கும்பகோணம், மே 6- கும்பகோணம் நகராட்சி மற்றும் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் கும்பகோணம் நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், நகராட்சி ஆணையர் லெக்ஷ்மி தெரிவித்ததாவது, கும்பகோணம் நகரம் தீவிர நோய் தொற்று கட்டுப்பாடு பகுதியில் உள்ளது. தஞ்சை மாவட்டமும் சிவப்பு நிற பட்டியலில் உள்ளது. ஆகையால் தற்போதைய நிலையில் கும்பகோணம் நகரத்தில் தமிழக அரசு அறிவித்த எந்த தளர்வும் நடைமுறையில் இல்லை. ஆகவே அத்தியாவசிய பொருட்கள் விற்பனையகங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. முகக் கவசம், சமூக விலகல், நேரக் கட்டுப்பாடு போன்றவை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் தற்போது தடை செய்யப்பட்ட பெரிய கடைவீதி பகுதியில் உள்ள கடைகளில் பொருட்களை வெளியே எடுக்க ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரும் ஏற்கனவே இரண்டு முறை அனுமதி அளித்தார்கள். இந்நிலையில் மீண்டும் ஒருமுறை பொருட்களை வெளியே எடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். கூட்டத்தில் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் மற்றும் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் தலைவர் சோழா சி.மகேந்திரன், செயலாளர் வி.சத்தியநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.