தஞ்சாவூர்: நீதிமன்ற கட்டணங்கள் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வலியுறுத்தி ஏப்.26, 27 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு குழு செயற்குழு கூட்டம் தஞ்சையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் பொதுச்செயலாளர் சிவசுப்ரமணியன், நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வக்காலத்து மெமோ அப்பியரன்ஸில் வழக்கறிஞர் அட்டெஸ்ட் செய்யும் நடைமுறை மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது அட்டெஸ்ட் செய்யும் வழக்கறிஞர்களின் போட்டோ ஒட்ட வேண்டும் என்று கொண்டு வரப்பட்டுள்ள புதிய நடைமுறையை திரும்ப பெற வேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக துணை நீதிபதியை நியமனம் செய்யாமல் திட்டமிட்டு காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. சமரச தீர்வு என்ற நடைமுறை எந்த நேரத்தில் வந்தாலும் அதனை வழக்கறிஞர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். ஏனெனில் இது ஒரு கட்டப்பஞ்சாயத்து போல் உள்ளது. வாடகைச் சட்ட தீர்ப்பாயம், மோட்டார் வாகன நஷ்ட ஈடு கோரும் மனு ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தாலுகாவில் தீர்ப்பாயம் அமைத்து விசாரணையை விரைவுபடுத்துவதற்கு பதில் சமரசம் என்ற நிலைக்கு கொண்டு செல்வதை கைவிட வேண்டும். தேனி நீதிமன்றத்தில் விசாரணைக் கூண்டில் இருந்தபடி மிரட்டல் விடுத்த காவல்துறை அதிகாரியை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். நீதிமன்ற கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வழக்காடிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.26, 27 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இந்த போராட்டத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் கலந்து கொள்கின்றனர். சுமார் 60 ஆயிரம் வழக்கறிஞர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதை தொடர்ந்து மே மாதம் மதுரையில் திறந்தவெளி மாநாட்டை நடத்துகிறோம். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அடுத்தகட்டப் போராட்டம் குறித்து தெரிவிக்கப்படும்”.இவ்வாறு அவர் கூறினார்.