தஞ்சாவூர்:
தமிழகத்தில் சுகாதார ஆய்வாளர்பணிக்கான அரசாணை 337ஐ.,திரும்ப பெறக் கோரி தமிழகம் முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள், கடந்த4 ஆம் தேதி முதல் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், மதுரை மாவட்டம் கீழப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(31), கிரேட் 2ல் கடந்த 2014 ஆம் ஆண்டு சுகாதாரஆய்வாளர் பணியில் சேர்ந்துள்ளார்.
தற்போது இவர் தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம் செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்குட்பட்ட குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த 15 நாட்களாக விடுப்பில் சென்று விட்டு கடந்த 4 ஆம் தேதி மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். அப்போது, புதியஅரசாணை குறித்து சக ஊழியர்களிடம் புலம்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து புதன்கிழமை அன்று தூக்க மாத்திரைகளைத் தின்ற நிலையில், குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பில் மயங்கி விழுந்துள்ளார். அவர் மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு சுகாதாரஆய்வாளர்கள் சங்க தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் அமுதவாணன் கூறியதாவது: தமிழகத்தில்,5,000 மக்கள் தொகைக்கு, ஒருசுகாதார ஆய்வாளர் வீதம், 8,000க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டனர். 2006ல், அப்பணியிடங்கள், 5,700 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம், 28ல்,மீண்டும் சுகாதார ஆய்வாளர்களின் எண்ணிக்கையை, 3,400 ஆக, குறைத்து, அரசாணை 377ஐ வெளியிடப்பட்டது. மக்கள் தொகை பெருகிவரும் நிலையில், டெங்கு, சிக்குன் குனியா போன்ற பல்வேறு வகை காய்ச்சல் பரவி வருகிறது. நோய் தாக்குதலிலிருந்து மக்களை காக்கும் பொறுப்பு, சுகாதார ஆய்வாளர்களுக்கு உள்ளதால், பணிச்சுமை அதிகரித்துவருகிறது. இந்த ஆள் குறைப்பால், எதிர்காலத்தில், நோயை கட்டுப்படுத்துவதில், சிக்கல் ஏற்படும். இதுகுறித்து, அரசிடம் கேட்டால், நோயை முழுமையாக கட்டுப்படுத்தி விட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால், டெங்கு உள்ளிட்ட நோய்கள், திடீரென பரவுகின்றன. அதை கட்டுப்படுத்த, அதிக பணியாளர்கள் தேவை. சுகாதார நிலையங்களில் கிரேடு ஒன்று, களப்பணியில் கிரேடு இரண்டு என, ஆய்வாளர்கள் பணிபுரிந்தனர். தற்போது, இருபணியிடங்களையும் ஒன்றாக்கிவிட்டனர்.
இதனால், பலர் பதவியிறக்கம் செய்யப்பட்டனர். இனி, பதவி உயர்வும் கிடைக்காது. இதை கண்டித்து, தற்போது கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்திவருகிறோம். இம்மாதம் 25 மற்றும் 26 ம் தேதிகளில் சென்னை இயக்குநர்அலுவலகத்தில் 48 மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளோம். அரசாணையை ரத்து செய்து மீண்டும் எங்கள் உரிமையை எங்களுக்கே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” என்றார்.