tamilnadu

img

தென்காசி: குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மிதமான மழை பொழிந்து குற்றாலம் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டும். அத்தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

நேற்று (14.07.24) விடுமுறை தினம் என்பதால், குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் அருவிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர். இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்த நிலையில், இன்று தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.