சென்னை, ஆக. 28 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் நிர்வாகம் ஊடகங்களுக்கு விதித்த தடையை பிரஸ் கவுன்சில் தலைவர் ஆதரித்ததற்கு மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கண்ட னம் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊடகங் களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்தும் தடையை ஆதரித்த இந்திய பிரஸ் கவுன்சில் நிலைப்பாட்டை கண்டித்தும் சென்னையில் ஊடகவியலாளர் நடத்திய கூட்டத்தில் பேசிய அவர், பிரஸ் கவுன்சில் ஜம்மு-காஷ்மீர் மாநில விவகாரத்தில் மேற்கொண்ட நிலைப்பாடு ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு எதிரானது என்றும் கூறினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊடகங்களின் சுதந்திரம், பத்திரிகையாளர்களின் சுதந்திரம், ஆகியவற்றுக்கு எதிரான தகவல் தொடர்பு துண்டிப்பு நடவடிக்கையை கவுன்சில் ஆதரித்தது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு ஊடகங்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு வந்தபோதிலும் அதுபோதாது என்றும் ஒரு போதும் ஊடக சுதந்திரத்தைப் பறிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இது ஊடகம் தொடர்புடைய விஷயமோ சுதந்திரமோ அல்ல, குடிமக்களின் சுதந்திரம் சம்பந்தப் பட்டது. அனைத்து குடிமக்களுக்கும் நமது அரசியல் சாசனம் ஜனநாயக உரிமைகளை வழங்கியுள்ளது. இதில் தலையிடுவது என்பது நாட்டு மக்களின் அடிப்படை உரிமை யில் தலையிடுவதற்குச் சமமாகும் என்றும் ராம் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் வி.கீதா பேசுகை யில், காஷ்மீரில் ஊடகக் கட்டுப்பாடு தொடர்பாக மவுனத்தை கடைப்பிடிக்கப் போவதாக பிரஸ்கவுன்சில் கூறியது அதை நியாயப்படுத்தியதையும் ஏற்கமுடியாது என்றார். எதையும் எழுதாதே என்று அரசு நிர்ப்பந்திக்கிறது. பிரஸ் கவுன்சிலோ அமைதி யாக இருங்கள் என்கிறது. இது ஜனநாயக கோட்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் அவர் கூறினார். சுதந்திரமான வெளிப்படையான நேர்மை யான ஊடகத்தின் பணியே சிறந்த தேசநலனாக இருக்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்றால் நான் அங்கு எந்த பகுதிக்கும் சுதந்திரமாகச் செல்லவும் யாரையும் சந்தித்துப்பேசவும் உரிமை இருக்கவேண்டும் என்றார்.
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அம்மாநிலத்தில் குடிமக்களுக்கு அரசியல் சாசனப்படி அளிக்கப்பட்டிருந்த பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான அஜிதா கூறினார். இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மூத்த தலைவரும் பிரஸ் கவுன்சில் முன்னாள் உறுப்பினருமான கே.அமர்நாத், பேசுகையில் பிரஸ் கவுன்சிலின் தற்போதைய முடிவை எதிர்த்து போராடி அதன் புனிதத்தன்மையைப் பாதுகாப்போம் என்றார்.
பிரஸ் கவுன்சில் பல்டி
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இந்திய பிரஸ் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் அரசின் இந்த கட்டுப்பாடுகளுக்கு பிரஸ் கவுன்சில் ஆதரவு அளித்தது. இதற்கு பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பத்திரிகை அமைப்புகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தனது போக்கை பிரஸ் கவுன்சில் மாற்றிக்கொண்டுள்ளது. இம் மாதம் 5 ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளை எதிர்த்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த காஷ்மீர் டைம்ஸ் நாளிதழின் நிர்வாக ஆசிரியர் அனுராதா பாசின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விஷயத்தில் பிரஸ் கவுன்சில் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாகவும் இதில் நீதிமன்றம் தலையிடவேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனுவுக்கு பிரஸ் கவுன்சில் அளித்த பதில் மனுவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரஸ் கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதன் செயலாளர் அனுபமா பட்நாகர் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.