தஞ்சாவூர், ஆக.25- டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை நிறுத்தி விட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். ஞாயிறன்று திருமண விழாவிற்கு தஞ்சை வந்திருந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாஜகவைச் சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. இதே போல் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்கள். இது மனித குலத்திற்கு விரோதமானது.
டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டு களாக குறுவை சாகுபடி இல்லை. கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளாக தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றாமல் இருந்து விட்டு, மேட்டூர் அணையை திறக்கும் வரை பணி களை தொடங்குகிறோம் எனக் கூறினர். பின்னர் பணிகளை தொடங்கி தற்போது வரும் 31-ஆம் தேதிக்குள் முடிப்பதாக தெரிவித்துள்ளனர். அவசர, அவசரமாக கரைகளை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். தமிழக அரசு தூர்வார ஒதுக்கிய நிதி ஆளும் கட்சியினர் கொள்ளை அடிப்பதற்குத் தான். மேட்டூரில் இருந்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்தால் தான் கடைமடைப் பகுதிக்கு சென்றடையும். தூர்வாரும் பணிகளை அவசர கதியில் மேற்கொள்வது பொய்க் கணக்கு எழுதத் தான். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதில் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களை பயன்படுத்தினால் அவர்களுக்காவது பிரயோஜனம் இருந்து இருக்கும். ஆனால் அரசியல்வாதிகள், காண்ட்ராக்டர்கள் கொள்ளையடிக்கத்தான் இந்த திட்டம் பயன்படுத்தப்படுகிறது. தூர்வாரும் பணிகளால் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பாசன வசதிகளை உருவாக்கும் போது, ஏற்கனவே உள்ளவற்றுக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது மேட்டூர் பகுதியில் ஏரிகளை உருவாக்கி தண்ணீர் சேமிக்கும் போது, டெல்டா பாசனம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கே.பால கிருஷ்ணன் கூறினார். சிபிஎம் மாவட்டச் செய லாளர் கோ.நீல மேகம், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.அபிமன்னன், சரவணன், அரவிந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.