tamilnadu

img

மோடி அரசால் நெருக்கடியைத் தீர்க்க முடியாது

பொருளாதார அறிஞர் பேரா. பிரபாத் பட்நாயக் நேர்காணல்

கடந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை தொட்டுவிடும் என்று மிகுந்த பேராவலுடன் குறிப்பிட்டார்.  (1 டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி.  இன்றைய நாளில் 1 டாலரின் மதிப்பு 74 ரூபாய்).  இதனைத் தொடர்ந்த சில வாரங்களில், மத்திய புள்ளியியல் அலுவலகம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) ஏப்ரல் மாதம் முதல் ஜுன் வரை உள்ள காலாண்டில் கடந்த ஆறு வருடங்களாக இல்லாத அளவிற்கு 5 சதம் அளவிற்குக் குறைந்து போயுள்ளது என்று கூறுகிறது. ரிசர்வ் வங்கி தனது உபரியிலிருந்து ரூ. 1.76 லட்சம் கோடிகளை மத்திய அரசாங்கத்திற்கு மாற்றி விடுகிறது.  அரசாங்கம் 10 பொதுத்துறை வங்கிகளை 4 தொகுப்புகளாக இணைத்து அறிவிக்கிறது.  இந்த அறிவிப்புகள் எல்லாம் ஸ்திரமற்ற இந்திய பொருளாதாரப் பின்னணியில் வருகிறது.  ஆட்டோ மொபைல் துறையில் இருந்து பிற துறைகள் வரை நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவிக் கொண்டிருக்கிறது.  வேலையின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் வரி சேகரிப்பில் நிர்ணயிக்கப்பட்டதில் இருந்து ரூ. 1.67 லட்சம் கோடிகள் குறைவாக வசூலிக்கப்பட்டுள்ளது.  இவையெல்லாம் நிர்மலா சீதாராமனுக்கு மட்டுமல்ல, இந்திய பொருளாதாரத்திற்கும் ஒரு கஷ்டமான காலமாகவே இருக்கும் என்று தெரிவிக்கிறது.  இந்த பொருளாதார நெருக்கடி குறித்து ‘கேரவன்’ ஏட்டின் செய்தியாளர் கௌசல் ஷரஃப், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் பொருளாதார பேராசிரியரும், பொருளாதார அறிஞரான பேரா.பிரபாத் பட்நாயக்கிடம் நடத்திய நேர்காணல் இது: பிரபாத் பட்நாயக்கைப் பொறுத்த வரையில், நிதிப் பற்றாக்குறையின் மீதான இந்தியக் கொள்கை குறித்து தொடர்ச்சியாக விமர்சனத்தை முன் வைத்துக் கொண்டிருப்பவர்.  நிதிப் பற்றாக்குறை என்பது வேறொன்றுமல்ல.  இந்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்திற்கும் மொத்த செலவினத்திற்கும் இடையிலான வேறுபாடு தான் நிதிப் பற்றாக்குறை. நிதிப் பற்றாக்குறை என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதம் வரையில் தான் இருக்கலாம் என்று இந்தியாவில் பொருளாதாரக் கொள்கை வரையறுக்கிறது.  இதனால் பொதுச் செலவினங்களில் பெரிய அளவிற்கு அரசு ஈடுபடுவதற்கான வாய்ப்பினை இது மறுக்கிறது. இதற்கு எதிரான தனது நிலைப்பாட்டினை விளக்குவதோடு, இந்தியப் பொருளாதாரம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதன் காரணத்தையும் சூழலையும், இதற்கெதிரான அரசாங்கத்தின்  எதிர்வினை எப்படி பயனற்றதாகிப் போகும் என்பதையும் விளக்குகிறார் பேரா. பிரபாத் பட்நாயக்.  “பாஜக அரசாங்கம் இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான எந்த வழி முறையையும் கொண்டிருக்கவில்லை, அதனால் இந்த நெருக்கடி என்பது மேலும் தீவிரமாகும்” என்கிறார் பிரபாத் பட்நாயக்.

ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் இது வரை இல்லாத அளவிற்கு மிக மோசமாக 5 சதம் என்று காட்டுகிறது.  அதே நேரத்தில், அரசாங்கம் பெரிய வங்கிகளை இணைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டு இந்த புள்ளி விவரங்களின் தாக்கத்தை தள்ளி வைக்க முனைகிறது.  இந்த இரண்டையும் நாம் எப்படி பார்ப்பது?

பதில் : பொருளாதார மந்தத்தில் இருந்து, அல்லது சரிவில் இருந்து, வங்கிகளின் இணைப்பு வெளியே கொண்டு வந்து விடும் என்ற கருத்தினை ஏற்படுத்த முயல்வது சரியல்ல; அதற்கு எந்த அடிப்படையும் இல்லை. வங்கி இணைப்புக ளால், இந்த பொருளாதார நெருக்கடியில் எள்ளளவும் மாற்றம் ஏற்படப் போவதில்லை.  மாறாக இந்த வங்கி இணைப்புகள் என்ன செய்யும்?  பெரிய அளவு வணிகப் பரிவர்த்தனைகளை அதிகமாக்குவதன் மூலம், செலவினங்களை பரவலாக்கி னால், பரிவர்த்தனை செலவினங்கள் குறையும்;  இதனால் வங்கிச் சேவைக்கான செலவினங்கள் குறையும்;  இதனால், வங்கிகள் வசூலித்துக் கொண்டிருக்கும் வட்டி விகிதத்தினை குறைக்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது.   ஆனால், பெரிய அளவில் செலவினங்களை அதிகரிப்ப தன் மூலம் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஏனென்றால், வட்டி விகிதத்தின் தாக்கம் எப்போது இருக்கும் என்றால், முதலீட்டின் அளவு அதிகரிக்கும் போது இருக்கும். இப்படிப்பட்ட சூழலில், பொருளாதாரத்தில் உற்பத்திப் பொருளுக்கான கிராக்கி அதிகரிக்காத போது, வட்டி விகிதத்தை அரசாங்கம் குறைத்தாலும் கூட, இதனால் முதலீட்டின் அளவு அதிகரிக்கப் போவதில்லை.  பொருளாதாரத்திலும் இதனால் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. இந்த முதலீடுகள், வட்டியினால் நெகிழ்வுத் தன்மை பெறுவதில்லை.  இதற்கு பொருள் வட்டி விகிதத்தைப் பொறுத்து முதலீடுகளின் அளவு மாறி விடப் போவதில்லை என்பது தான்.  எனவே, வட்டி விகிதத்தை குறைப்பதால், செல வினங்கள் அதிகரிக்கும் என்பது தவறான, குறைபாடுள்ள வாதமாகும்.  

உதாரணத்திற்கு, அமெரிக்காவில், வட்டி விகிதத்தை பூஜ்ஜியம் அளவிற்குக் கொண்டு வந்தது அமெரிக்க அர சாங்கம்.  ஆனால், இதனால் பெருமளவில் ஒரு தாக்கமும் ஏற்பட்டுவிடவில்லை.  எப்போதுமே வட்டி விகிதக் கொள்கை என்பது மழுங்கலானது தான்.  அதுவும் தற்போதைய குறிப்பிட்ட சூழலில், இது எந்தவிதத்திலும் உதவிவிடப் போவ தில்லை.  இதன் விளைவாக, பாஜக அரசாங்கத்திற்கு இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கு எந்த வழி வகையும் இருக்கப் போவதில்லை.  இந்த நெருக்கடி மேலும் தீவிரமாகத் தான் போகின்றது.   

இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தமடைவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?  

அரசாங்கம், பொருளாதார வளர்ச்சி 7 அல்லது 7.5 சதவீதம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.  முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணி யன், பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.5 சதம் என்று கூறி யுள்ளார். இதன் பொருள் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்கள் அரசாங்கத் தரப்பில் மிகைப்படுத்தப்பட்டு சொல்லப்படுகின்றன என்பது தானே.  ஒரு வேளை இந்த அதிகாரப்பூர்வ புள்ளி விவரம் 4.5 சதம் என்று சொல்லப்பட்டுள் ளது என்று எடுத்துக் கொண்டால், அதாவது அதிகாரப் பூர்வ தகவலின் படியே கூட இந்த வளர்ச்சி விகிதம் சுமார் 5 சதம் அளவிற்குக் குறைந்துள்ளது என்று கொண்டால், உண்மை யில் இந்த வளர்ச்சி விகிதம் எந்த அளவிற்கு வீழ்ந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ள முடியும். எனவே, நாம் உண்மையிலேயே ஆபத்தான நிலையில் இருக் கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.  

ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு  (RBI Board) சமீபத்தில் அரசிற்கு  ரூ. 1.76 லட்சம் கோடியை, உபரி நிதியில் இருந்து மடைமாற்றம் செய்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி யின் மீது அரசாங்கம் தன்னுடைய உரிமையை நிலை நாட்ட எத்த னிக்கிறது அல்லது அதிகாரம் செலுத்த நினைக்கிறது என்று கொள்ளலாமா?

பதில் :  இரண்டு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.  ஒன்று அரசாங்கம் எந்த அடிப்படையில் இந்த பணத்தை ரிசர்வ் வங்கி யிடமிருந்து எடுத்துள்ளது என்பது.  வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், அரசு, அதாவது, இந்திய ஜனாதி பதி, இந்திய ரிசர்வ் வங்கியின் சொந்தக்காரர் ஆவார். அதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் தனது பங்கினை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு கூடுதலாக செய்யப்பட்டிருப்பது என்னவென்றால், ரிசர்வ் வங்கியே அதனுடைய கையிருப்பின் அளவினை குறைத்துள் ளது; இதன் மூலமாக அரசாங்கத்தின் கைகளில் அதிகப் பணம் இருக்கும்படி செய்யப்பட்டுள்ளது.   தற்போது, ஒரு கேள்வி – சட்ட ரீதியாக – ரிசர்வ் வங்கி, அர சாங்கத்திற்காக இப்படி தன்னுடைய இருப்பாதாரத்தை குறைத்துக் கொள்ள முடியுமா என்பது.  

மிக முக்கியமாக நாம் எழுப்ப வேண்டிய இன்னொரு கேள்வி என்னவென்றால், இது உண்மையிலேயே விரி வாக்கத்திற்கான நடவடிக்கையா என்பது.  அடிப்படையில் முதன்மையாகத் தேவைப்படுவது என்னவென்று பார்த்தோ மானால், கிராக்கி அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கிய தேவையாகும். மக்களின் கைகளில் அதிகமான வாங்கும் சக்தி ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் கிராக்கி யை அதிகரிக்க முடியும். அரசாங்கம் தற்போது தன்னுடைய பொதுச் செலவினங்களை அதிகரிக்க திட்டமிட்டுக் கொண்டி ருக்கிறதா என்பது தான் தற்போதைய கேள்வி. அந்த கேள்வியை எழுப்பும் போது இல்லை என்பதே இதற்கான விடை. ஏனெனில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, எதிர்பார்க்கப்படும் வருமானம் குறித்த கணக்கீட்டினைப் பார்த்தோமானால், அதில் ரூ.1.7 லட்சம் கோடி பற்றாக்குறை இருப்பதைக் காணலாம்.  இது கிட்டத்தட்ட ரிசர்வ் வங்கி அளித்த தொகையுடன் ஒத்துப் போவதை பார்க்க முடியும்.  எனவே, ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட பணம் என்பது  பட்ஜெட்டில் ஏற்கனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்ட செல வினங்களை அதிகரிக்க உதவப் போவதில்லை என்று தெளி வாகத் தெரிகிறது. கூடுதல் செலவினங்கள் செய்யப்படப்போவ தில்லை.  மேலும், இன்னொரு விஷயம் தெளிவாவது என்ன வென்றால், இப்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டின் மூலம் அரசாங்கம் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சியடைந்து வெளியே வர முடியாது என்பது தான்.  

இந்த பொருளாதார நெருக்கடி  குறித்து தங்களுடைய மதிப்பீடு என்ன? பாஜக அரசாங்கம் இந்த நெருக்கடியில் இருந்து எப்படி வெளிவரும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?\

பதில் : உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மந்த நிலைக்குக் காரணம், உற்பத்திப் பொருட்களுக்கான - நுகர்பொருட்களுக்கான - உணவுப் பொருட்களுக்கான கிராக்கி குறைந்துள்ளது என்பதால் தான். கிராக்கி ஏன் குறைந்துள்ளது என்றால், ஏழைகளுக்கு வருமானப் பகிர்மா னம் சரியாகச் சென்றடையவில்லை. அனைத்தும் செல் வந்தர்களுக்கே திருப்பி விடப்படுகிறது.  இதனால், கிராக்கி மேலும் மேலும் குறையும். செல்வந்தர்களின் இயற்கை குணமே அவர்களுக்குத் திருப்பி விடப்படும் ஒவ்வொரு ரூபா யும், அவர்களால் சேமிக்கத்தான் படுமே தவிர, உள்நாட்டு நுகர்விற்காக செலவு செய்யப்பட மாட்டாது. மேலும், அவர்கள் இறக்குமதியைத் தான் ஊக்குவிப்பார்கள்.    எனவே, வலதுசாரிப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ள வருமானப் பகிர்மானம் என்பது, உள்ளூர் சந்தைகளில் பெருவாரியான மக்களால் வாங்கப்படாமல் பொருட்களுக் கான கிராக்கியை மேலும் மேலும் குறைத்து விடும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த திருப்பம் என்பது திடீரென்று ஏற்பட்டதல்ல. இது கொஞ்ச கால மாகவே நடந்து கொண்டிருக்கிறது.  ஆனால், கிராக்கி குறைவது என்பது தற்காலிகமாக ஒரு பகுதி சர்வதேசச் சந்தைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலமாக தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இது நாள் வரை உலகச் சந்தைக்கு நாமும் சீனாவும் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலமாக, உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை உடனடியாக உணரவில்லை எனலாம்.

 இரண்டாவது காரணம், நம்மிடம் சொத்துக்களின் விலை யில் ஒரு ஊதிப்பெருக்கப்பட்ட ஏற்றம் இருந்தது.  அதே போல பங்குச் சந்தையில், ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் இருந்தது.  இவை யெல்லாம் கிராக்கி குறைந்ததன் தாக்கத்தினையும், வலதுசாரி வருமானப் பகிர்மானத் திருப்பத்தின் தாக்கத்தை யும் தற்காலிகமாக தடுத்து நிறுத்தியிருந்தன.  தற்போது  இப்படி ஊதிப் பெருக்கப்பட்ட இந்த விலை ஏற்றங்கள் வெடித் துச் சிதறியதன் காரணமாக, உலகப் பொருளாதார நெருக்க டியின் மோசமான விளைவுகள் நமது பொருளாதாரத்திலும் தெரிய ஆரம்பித்துள்ளது. இவையெல்லாம் சேர்ந்து தான்,  இந்திய பொருளாதார வளர்ச்சி மந்தமாகக் காரணமாகி யுள்ளன.   இதற்கெதிராக அரசாங்கத்தால், கிராக்கியை அதிகரிக்க முடியும்.  ஆனால், பாஜக அரசாங்கம் இதற்கான திட்டமிடலை செய்யவில்லை.  அது உண்மையில் நிதிப் பற்றாக்குறையை ஏற்கனவே செய்யப்பட்டுள்ள வரையறையிலேயே நிறுத்து வதிலும், செல்வந்தர்களுக்கு மேலும் வரி விதித்துவிடாமல் அப்படியே தக்க வைப்பதிலும் தான் கவனம் செலுத்துகிறது.  ஏழைகளின் மீது வரி விதித்து அதனை செலவு செய்வதன் மூலமாக கிராக்கியை அதிகரித்து விட முடியாது.  எப்படியும் ஏழைகள் அவர்கள் வருமானத்தின் பெரும்பகுதியை செலவு செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளனர்.  செல்வந்தர்க ளிடம் உள்ள இயற்கையான குணாம்சத்தின் படி, அவர்கள் தங்கள் வருமானத்தினை சேமிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.  அவர்களின் சேமிப்பின் மீது வரி விதிப்பதன் மூலம், நம்மால் கூடுதலாக செலவு செய்ய வைக்க முடியும். இதன் மூலம் கிராக்கியை உருவாக்க முடியும். ஆனால், பாஜக அரசாங்கம் செல்வந்தர்கள் மீது வரி விதிப்பதில்லை.  முதலில் பட்ஜெட்டில் செல்வந்தர்கள் மீது வரி விதிப்பதற்கான ஆலோசனை இருந்தது.  ஆனால், இது உண்மையில் மிகவும் சொற்பமான அற்பமான அளவிலேயே இருந்தது.  இதனால், எந்த விதத்திலும் பொருளாதாரத்தில் ஒரு நிதித் தூண்டுதலும் உண்மையில் ஏற்படவில்லை.  

சொத்து வரி அல்லது வாரிசுரிமை வரியை பாஜக அரசாங்கம் விதிக்கலாம் என்றும், இதன் மூலம் ரூ. 5.6 லட்சம் கோடிகள் அளவிற்கு நிதியை திரட்ட முடியும் என்றும் நீங்கள் ஆலோசனை தெரிவித்திருந்தீர்கள். ஆனால், இதுவரை இந்த ஆலோசனை ஏற்கப்படவில்லை என்பதால் நீங்கள் ஏமாற்றமடைகிறீர்களா?  

பதில்: பட்ஜெட்டிற்கு முன்னால், பாஜக அரசாங்கம் சொத்து வரி விதிக்கப்போவதாக ஒரு பேச்சு இருந்தது.  நான் அப்படி ஒன்றும் எதிர்பார்த்துவிடவில்லை இந்த அரசாங்கம் அதனை செய்யும் என்று.  ஏனென்றால், பாரதிய ஜனதா கட்சியே கார்ப்ப ரேட் நிதிகளின் நன்கொடையை நம்பித்தான் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது. கடந்த தேர்தலில் அவர்கள் செலவு செய்த ரூ. 27000 கோடி – ஒவ்வொரு தொகு திக்கும் கிட்டத்தட்ட ரூ. 50 கோடி அளவிற்கு செய்த செலவு என்பது இவர்கள் அளித்த நிதி தான்.  சொத்து வரியினை விதித்தால் இந்த நிதியினை பாரதிய ஜனதா கட்சி பெற முடியாது.  

அரசாங்கமும் கார்ப்பரேட்டும் இணைந்த தேசிய துறை என்று மீடியாக்களால் குறிப்பிடப்படுகிற - அரசாங்கத்தின் சலுகை சார்ந்த இந்திய கார்ப்பரேட் குழுமங்கள், நிதி பற்றாக்குறை என்பது ஏதோ புனிதத் தன்மை வாய்ந்தது போன்றும், இதில் யாரும் தலையிட முடியாது என்பது போன்றும் கூறுகின்றன; ஆனால், நிதிப் பற்றாக்குறை குறித்த தங்களின் பார்வை சிறிது வித்தியாசமாக உள்ளதே?

 பதில்: அரசாங்கம் தனது செலவினங்களை அதிகரிக்க நிதிப் பற்றாக்குறை தான்  வழி என்று  நான் சொல்லவில்லை.  ஏற்றுக் கொள்ளவில்லை.  உலக வங்கி, ஐஎம்எஃப், நிதி அமைச்சகம் மற்றும் அரசாங்கம் ஆகியவை நிதிப்பற்றாக் குறை குறித்து கொண்டுள்ள பார்வையில் இருந்து என்னு டைய பார்வை முற்றிலும் வேறானது.  ஏனென்றால், இதனால் சொத்துக்களில் ஏற்றத் தாழ்வான அசமத்துவ நிலை உருவாகி விடும்.  பொருளாதாரத்தில் ஒரு புறம் நிலையானதொரு சேமிப்பு இருக்கிறது, அந்த சேமிப்பில் இருந்து அரசாங்கம் தேவைப்படும்போது, நிதிப் பற்றாக்குறை வரும்போது, கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற தவறான ஒரு கருத்தோட்டம் உள்ளது.  இது சரியல்ல.  ஏனென்றால், ஒரு வருடம் என்பதை எடுத்துக் கொள்வோம்; அந்த ஒரு வருடத்தில், அரசாங்கம் கடன் வாங்குகிறது, செலவு செய்கிறது; இப்படி செய்யப்படும் ஒவ்வொரு செலவின வகையாலும் கிராக்கி அதிகரிக்கிறது, உற்பத்தியும் பெருகுகிறது; இதனால் சேமிப்பின் அளவும் கூடுகிறது.  எனவே, அரசாங்கம் ஏற்கனவே நிலையாக உள்ள சேமிப்புகளில் இருந்து கடன் வாங்கவில்லை.  அரசாங்கம் சேமிப்பினை விரிவாக்குகிறது.  அல்லது இதையே வேறு விதமாகக் கூறுவதென்றால் தான் வாங்கிய கடனை தனியா ரின் கைகளில் அதாவது, மக்களின் கைகளில் சேர்க்கிறது. இது பொருளாதாரத்தில் மிகவும் அடிப்படையான முன் மொழிவு. ஆனால், இது குறித்து யாரும் புரிந்து கொண்ட தாகத் தெரியவில்லை. அமைச்சர்களோ அல்லது அதிகாரி களோ கூட இதனை புரிந்து கொள்வதில்லை.

எனவே ஒரு பொருளாதாரத்தில், பயன்படுத்தப்படாத திறனும், வேலையின்மையும் இருக்கும்போது, அரசாங்கம் கடன் வாங்கினால், ஏற்கெனவே மக்கள் கைகளில் சேர்த்த தில் இருந்து திரும்ப எடுத்துக் கொள்கிறது என்று பொருள்.  இப்போது நான் ஏன் இதனை எதிர்க்கிறேன் என்று சொல்கிறேன். ஒரு வேளை அரசாங்கத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.100 எனக் கொள்வோம்.  அப்படியானால், அது தனியார் சொத்தினை ரூ. 100 அளவிற்கு அதிகரிக்கிறது.  பின் கடன் வாங்குகிறது.  ஒரு வேளை அரசாங்கம் இந்த ரூ.100க்கு வரி விதிக்கிறது என்றால், வரி விதித்த பிறகு, தனியார் கைகளில் உள்ள சேமிப்பின் அளவில் எந்த குறைவும் ஏற்படாது.  அதே நேரத்தில், செல்வ அசமத்துவத்தில் அதிகரிப்பும் ஏற்படாது.  எனவே தான், நிதிப் பற்றாக்குறையுடன் அரசாங்கம் செல வினங்களை செய்ய வேண்டும் என்பதை ஏற்க மறுக்கிறேன்.  அப்படி நிதிப்பற்றாக்குறையுடன் செய்யும் போது தனியார் கைகளில் செல்வம் சேர்ந்து கொண்டிருக்கும், ஏழைகளுக்கு செல்வாதாரம் சென்று சேரும் வாய்ப்பில்லை. இதனால் செல்வ அசமத்துவம் பெருகும்.  அதனால் தான் நான் சொல்வது அரசாங்கம் வரி மூலம் வருமானத்தை உயர்த்தி செலவினங்க ளை செய்ய வேண்டுமே தவிர, பற்றாக்குறையை முன்னி றுத்தி செலவினங்களை செய்யக் கூடாது என்று வலி யுறுத்துகிறேன்.  

பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் உண்மையிலேயே மிகுந்த பேராவலுடன் சொல்கிறது... 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு இந்திய பொருளாதாரத்தை …

பதில் : அது சுத்த விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஏற்பாடு. பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து கொண்டிருக்கிறது.  கடந்த 45 வருடங்களாக இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது.  2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கி விடுவோம் என்று சொல்வதைப் போன்றது தான் 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதாரம் வளரும் என்று சொல்வது.  

தமிழில் : ஆர்.எஸ்.செண்பகம்