புதுதில்லி, மே 14-வருமான வரித் தாக்கலுக்கான ரீபண்ட் தொகையைப் பெறுவது தொடர்பாகப் போலியான மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றை நம்பவேண்டாம் என்று வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.வருமான வரித் தாக்கலுக்கான ரீபண்ட் (திருப்பிப்பெறப்படும் தொகை) குறித்து வருமான வரி செலுத்துவோர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் இணைய இணைப்பு அனுப்பப்படுவதாகச் சென்னை வருமானவரித் துறை அலுவலகத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. இது போன்ற மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போலியானவை எனவும், அவற்றை நம்பவேண்டாம் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சென்னைமுதன்மை தலைமை வருமான வரி அலுவலகத்தின் கூடுதல் ஆணையர் ஆர்.இளவரசி வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில், “தனிநபர் அடையாள எண், ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (one time password) கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றின் கடவுச்சொல் குறித்த தகவல்கள், ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரம், ஏடிஎம் கடவுச்சொல் ஆகியவற்றை மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது தொலைப்பேசி மூலம் வருமான வரித்துறை கேட்பதில்லை. வருமான வரி செலுத்துவோர் தங்களது முகவரி, வங்கிக் கணக்கு எண் போன்ற தகவல்களை வருமானவரித் துறையின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மற்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் குறுஞ்செய்திகளை வருமான வரி செலுத்துவோர் நம்பாமல் எச்சரிக்கையோடு இருக்குமாறு வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.