புதுதில்லி,அக்.29- உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ள எஸ்.ஏ பாப்டே நியம னத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் பதவிக் காலம் நவம்பர் 17-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டேவை நியமனம் செய்ய, நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்தார்.
தலைமை நீதிபதியின் பரிந்துரையை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கும் உத்தரவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அக்டோபர் 29 செவ்வாயன்று கையெழுத்திட்டார். உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நவம்பர் 18-ஆம் தேதி பதவியேற்கிறார். 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி வரை அவர், இப்பதவியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது.
மத்தியப்பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே பதவி வகித்துள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் 1956 ஆம் ஆண்டு பிறந்த சரத் அரவிந்த் பாப்டே, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 2000 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பொறுப்பு வகித்தார். 2013 ஏப்ரலில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பட்டாசுகளுக்கு எதிரான வழக்குகள், அயோத்தி வழக்குகள், பிசிசிஐ தொடர்புடைய வழக்குகள் என பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை எஸ்.ஏ பாப்டே விசாரித்துள்ளார்.