ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் நிர்வாகியாக இருந்தவரும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச்சேர்ந்தவருமான ஷீலா ரஷீத்துக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷீலா ரஷீத், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மீர் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.
புதுதில்லியில் உள்ள திலக் மார்க் காவல்நிலையத்தில் வழக்குரைஞர் அலக் ஸ்ரீவஸ்த்தவா அளித்திட்ட புகாரின் அடிப்படையில் ஷீலா ரஷீத்திற்கு எதிராக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டது.
முதல் தகவல் அறிக்கையில் ஷீலா ரஷீத்திற்கு எதிராக இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேசத்துரோகம்), 153-ஏ (மதம், இனம், பிறப்பிடம், இருப்பிடம், மொழி முதலானவற்றின் அடிப்படையில் பல்வேறு பிரிவினருக்கு இடையே பகைமையை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் நடந்துகொள்ளுதல்), மற்றும் 153 (கலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு, சிறப்புப் பிரிவுக்கு, புலனாய்வுக்காக அனுப்பப்பட்டது.
இதற்கிடையில் ஜாமின் கோரி, ஷீலா ரஷீத் தரப்பில் அவரது வழக்கறிஞர் சதீஷ் தம்தா டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றம் கூடுதல் அமர்வு நீதிபதி பவான் குமார் முன் இன்று ஷீலா ரஷித் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் அரசுதரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், " ஷீலா ரஷித்துக்கு இப்போதுவரை போலீஸார் எந்த சம்மனும் அனுப்பவில்லை. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த 6 வாதங்கள் தேவை. ராணுவத்தினர் தரப்பில் இருந்தும் எந்தவிதமான புகாரும் இல்லை " என்று தெரிவித்தார்.
அதற்கு ஷீலா ரஷித் தரப்பு வழக்கறிஞர், " போலீஸார் விசாரணைக்கு அழைத்தால் அதில் பங்கற்று தங்களின் ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி பவான் குமார் ஜெயின் பிறப்பித்த உத்தரவில், " குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷீலா ரஷித்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறேன். அவரை போலீஸார் கைது செய்யக்கூடாது, விசாரணைக்கு தேவைப்பட்டால் ரஷித் பங்கேற்று போலீஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 5-ம் தேதி நடக்கும்" எனத் தெரிவித்தார்.