tamilnadu

img

மன்னர்களும் தளபதிகளும் - என்.சிவகுரு

கோவிட் 19 வைரஸ் நோய் எல்லாவற்றை யும் தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. இது ஒரு மருத்துவ போர்ச் சூழல் காரணம், எதிரி (கிருமி)யை வீழ்த்த எந்த ஆயுதமும் இல்லாத கையறு நிலை. தனித்திரு, சுத்தமாக இரு என பொது ஆயுதமே இப்போது நம் கையில். அதைத் தவிர்த்து மற்றவையெல்லாமே உதிரி நடவடிக்கைகளே. இந்த புதுயுகப் போரில் ராஜதந்திரிகள், ராஜகுருமார்கள், மன்னர்கள், அறிவு சார் மந்திரிகளின் பங்களிப்பு குறைவே. ஆனால் போர்க் களத்தில் இருக்கும் தளபதிகள், சேனைகளின் பணி மகத்தானது. சாதுர்யம், அர்ப்பணிப்பு, தியாகம், விருப்பு வெறுப்பற்ற மனிதநேயம் என எல்லா வற்றிலும் மேன்மை மிக்க பணி. 

ஆகப்பெரும் தளபதிகளான மருத்துவர்கள், செவிலி யர்கள், அவர்களின் பணிகளுக்கு உதவிடும் பணியா ளர்கள், தூய்மை பணி செய்யும் உதவியாளர்கள் என அந்த போர்ப் படையின் நிலையை பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். அதில் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சொல்ல முடியாத துன்பங்கள் என்பது நம் அனைவரின் கவனத்துக்கு இன்னும் பெரிதாக வரவில்லை. 

நல்ல வேளை…

 இந்த துன்பத்திலும் ஒரு நல்ல விசயம் நடந்துள்ளது. இந்த ஆண்டுக்கான நிதி நிலை குறித்தும் அதில் குறிப்பாக, சுகாதாரத்துறையில் உள்ள படுபாதகமான அம்சங்கள் குறித்து இதே கட்டுரையாளர் இந்த பக்கத்தில் எழுதியிருந்தார். அதில் நிர்மலா சீத்தாராமன் சொன்ன ஒரு அம்சம், மாவட்ட தலைமை மருத்துவமனைகளை “தனியாருக்கு” தாரை வார்ப்பதும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் ஒரு சில உயர் சிகிச்சை பிரிவுகளை அதே தனியாருக்கு கொடுப்பதும் , அந்த மருத்துவமனைகளின் விரிவாக்கத்திற்கு “தனியார் பொது பங்கேற்பு (PRIVATE PU¡õLIC PARTNERSHIP) முறையை அறிமுகம் செய்வது என்பன உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகள் இன்னும் அமலாக வில்லை…அமலாகி இருந்திருந்தால் இந்தியாவில் கோவிட் 19 வரைபடம் வேறு மாதிரி இருந்திருக்க கூடும். “நல்ல வேளை” நடக்கவில்லை. இது ஒரு புறமிருக்க, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் அரசு பொது மருத்துவமனைகளே கோவிட்டுக்கு எதிரான போரில் தலைமை தாங்கும் போர்க் களங்கள். 

போரை துவங்கிய போது படைகள் நிராயுதபாணிகளாக களத்தில் இறக்கப்பட்டனர். களமாட ஆயுதம் எங்கே என கேள்வி கேட்டவர்கள் சுற்றி வளைக்கப்பட்டார்கள். மன்னரும் மகாமந்திரிகளும் வாயால் வாள் சுழற்றி கொண்டிருந்தனர்.  போர் எப்படியானது, எதிரிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என புரிய வைக்கவே மன்னர்களுக்கு வகுப்புகள் தேவைப்பட்டது. 

ஓஹோ.. அப்படியா என யோசித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரும் முன்னரே எதிரிகள் உள்ளே வந்துவிட்டனர். அதன் பின்னர் அவசர கதியில் ஏற்பாடுகள். வியூக கூட்டங்கள், என அதிகார மட்டத்தில் ஆலோசனைகள் நடக்க போர் களத்தின் வீரர்கள் நிலையோ பரிதாபம். ஒரு வழியாக ஆயுதங்கள் வந்தன முக கவசம், கையுறைகள், கிருமி நாசினி தான் முதல் ஆயுதங்கள். அதிலும் தட்டுப்பாடு. அதை வெளியே சொல்லக்கூடாது. மீறி சொன்னால் இடமாற்றம், பதவி உயர்வு பறிப்பு மற்றும் இத்யாதிகள். சரி, போருக்கு போவதற்கான களத்தை சீரமைப்பது என்பதே பெரும் பணி. தனிமை வார்டுகள் உருவாக்குவது, அதற்கான அடிப்படைகள், உள்கட்டமைப்பு, தேவைப்படும் உபகரணம், என எல்லாமே துரித கதியாக நிறைவேற்றப்பட்டன. 

போர்கள சூழல்...

கொரோனா வைரஸ் எனும் பொது எதிரியை எதிர்கொள்ள மற்றைய நாடுகளின் அணுகுமுறையே நமக்கு அனுபவ முன்மாதிரி. அதை நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல்கள். (ரயில் பெட்டிகளை தனிநபர் வார்டுகளாக மாற்றுவது, வர்த்தக மையங்களாக தயார் படுத்துவது, புதிதாக கட்டப்பட்டிருந்த தலைமை செயலகம், தொலை தூரத்தில் இருந்த பழைய மருத்துவமனை வளாகங்கள் எனச் சொல்லலாம். அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் தலைமையிலான குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதில் இன்னொரு முக்கிய தகவல், கிட்டத்தட்ட நம் மாநிலத்தின் அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் பராமரிப்பும் கடந்த சில ஆண்டுகளாகவே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு அதில் பணியாளர்கள் சொற்ப சம்பளத்தில் கடும் வேலைப்பணியினால் அவதிப்பட்டனர். அந்த ஒப்பந்த   பணியாளர்கள் தான் அரசு மருத்துவமனைகளின் பெரும்பான்மை தூய்மைப் பணியாளர்கள்.அவர்களில் பலர் வாழ்வாதாரத்துக்காக இது போன்ற பணிகளுக்காக தங்கள் சொந்த ஊரிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள். மன்னர்கள் போட்ட அவசர ஊரடங்கு உத்தரவாலும், தினசரி தேவைகளை சமாளிக்கவும் சொந்த ஊருக்கு போய்விட்டார்கள். என்ன செய்வார்கள் அந்த விளிம்பு நிலை உழைப்பாளி மக்கள்! 

ஆக பெரும்பாலான மருத்துவமனைகளில் இன்றைய நிலை 50 சதவீதம் தூய்மைப் பணியாளர்கள் வருகையே, நிலையை சமாளிக்க அந்தந்த  மாநகர, நகர ஒப்பந்த பணியாளர்களும், தற்காலிக பணியாளர்களே பணியில், போர்க் களத்தின் முக்கிய போராளிகளே இந்த நிலையில்தான்.

தளபதிகள் நிலை

கோவிட் 19 நோய் எதிர்ப்பின் முன்னணி தளபதி மருத்துவர்கள். அம்மருத்துவர்களின் துவக்க நிலை பிரச்சனைகள் ஓரளவே தீர்ந்துள்ளது. முக கவசம், கையுறை, கை கழுவுதற்கான சானிடைசர் சீராக கிடைத்து வருகின்றன. ஒரு முறை பயன்படுத்த பட்ட இந்த கவசங்களை மறு முறை பயன் படுத்த முடியாது . அழித்து விட வேண்டும். அதற்கேற்ற எண்ணிக்கையில் தருவிக்க வேண்டும். ஆக கொரோனா வார்டுகள் அதிகமாகும் பட்சத்தில் இவைகளும் அதிகமாகிட வேண்டும். ஆகையால் இன்று எல்லாமே உள்ளூர் தயாரிப்புக்கள் தான்.  

வார்டுகளில் இருக்கும் நோயாளிகளுக்கும் இவற்றை வழங்க வேண்டும். தனிநபர் தனிமைப்படுத்தல் பகுதிகளில்  குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.  நோயாளிகளின் நிலையை அவ்வப்போது கவனிக்க ஒரு ஏற்பாடு என களத்தின் நிலை துடிப்போடும் கவனத்தோடும் இருந்திடல் அவசியம். 

இந்த விசயங்களோடு தனிமைப்படுத்தும் பகுதியில் பணியாற்றும் அனைவரும் ”சுய தற்காப்பு சாதனம் (PERSONAL PROTECTIVE EQUIPMENT) உடையை கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். இந்த வெயில் காலத்தில் நாம் போட்டு கொள்ளும் ஆடைகளே நமக்கு எவ்வளவு அசெளகரியங்களை உருவாக்கும்? உள்ளாடை, அதற்கு மேல் ஆடை, அதற்கும் மேல இந்த கவசம்!  அதைப் போட்டு கொண்டு சாப்பிட, இயற்கை உபாதைகளை தீர்க்க, சிறிது நேரம் இளைப்பாற என எதையும் செய்ய முடியாது; ஆறு மணி நேர பணி. ஒரு சில மருத்துவமனைகளில் இந்த வேலை நேரம் அதிகமாகலாம். நிச்சயம் குறையாது.  அந்த 6 மணி நேர பணி முடித்து உடனே வீட்டுக்கு செல்ல முடியாது. அவர்களுக்கு என்று தனி நபர் அறைகள் மருத்துவமனை வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று, கவச உடைகளை கழற்றி அதை அழித்து விட்டு, அவர்களுக்கென்று தங்குவதற்கு  ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் தனியாக இருக்க வேண்டும். இது போல ஒரு வாரம். அடுத்து ஒரு டீம். இப்படியாக மருத்துவர்கள் (பெரும்பாலும்  முதுநிலை பயிற்சி மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள்) சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். இதே தான் செவிலியர்களுக்கும். 

தூய்மைப் பணியாளர்களுக்கோ இந்த சலுகைகள் எதுவும் இல்லை. நம் சமூக ‘அறத்தின்’ லட்சணம் இது. 

மாற்று மருத்துவர்களை ஈடுபடுத்துங்கள்

மருத்துவர்களின் தேவை பொது சமூகத்துக்கும் அவசர கால தேவைக்கும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. வந்து பணி செய்தால் எதையெல்லாம் அவர்கள் எதிர் கொள்ள நேரிடும் என்பதையெல்லாம் தொலை நோக்கோடு அரசு யோசிக்க வேண்டும். மக்களின் தேவை, மருத்துவர்களின் எதிர்பார்ப்பு என இரண்டையும் புத்திக் கூர்மையோடு அணுகி பதட்டமற்ற சூழலை தவிர்த்து சுமூக நிலை உருவாக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும். அதே போல மாற்று மருத்துவம் - ஆயுர்வேத, சித்த, யுனானி, ஹோமியோ முறையாக பயின்றவர்களை இந்த பணிகளில் ஈடுபடுத்துவது படைத்திறனை அதிகரித்திடும். 

கொரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் , செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிச்சயம் மன அயற்சி நிச்சயம் ஏற்படும். என்ன தான் மருத்துவம் படித்து பல் துறை தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே, அதற்கான உரிய ஏற்பாடுகள் அவசியம். 

ஒரு மருத்துவ நண்பர் முகநூலில்அயற்சி வெறுப்பில் இப்படி  பதிவிட்டிருந்தார்”: “எங்களை கேலி கிண்டல் செய்யும் நபர்களே, நான் சவால் விடுகிறேன். என் ஒரு மாத சம்பளத்தை தருகிறேன், ஒரு நாள் கொரோனா வார்டில் பணி செய்து விடுங்கள், எங்கள் வேதனையும் ,வலியும் தெரியும். சவாலுக்கு தயாரா?” 

இந்த குரலுக்கு  யார் பதில் சொல்வது? 

இது ஒரு புறம் இருக்க முதன்மைப் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு நோய் தொற்று அதிகமாகி வருகிறது. (ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையின் இருதய நோய் சிகிச்சை பிரிவு துறை தலைவர் உள்ளிட்ட அவரின் உதவி மருத்துவர்கள்) இது போன்ற துயர சம்பவங்கள் அதிகமானால் நட்டம் பொது சிவில் சமூகத்திற்கு தான். 

இறந்து போன இரண்டு மருத்துவர்களுக்கு நேர்ந்த கதி என்ன? தொலைநோக்கு இல்லாத அரசின் போக்கால் நேர்ந்த விளைவு அது. முதல் நிகழ்வு நடந்தவுடனேயே அரசு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லாமல் தினமும் பட்டியல் வெளியிட்டு புள்ளி விபரத்தை மட்டும் பகிர்கின்றது. சமயோசிதமாக செயல்பட வேண்டாமா? எல்லோரிடத்திலும் ஒரு தேவையற்ற அச்சம் இருக்கிறது. யார் அதை தெளிவுபடுத்துவது? அரசு தானே செய்ய வேண்டும்!