மத்தியில் ஆளும் பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த குடியுரிமைச்சட்டம் (சீர்திருத்தம்) 2019 சட்ட முன்வரைவு, பெரும் கூச்சல், குழப்பம் மற்றும் எதிர்ப்புகளு டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி யுள்ளது. நேற்று வரை ஆதரவு அளித்து வந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்துள்ளது. தமிழகத்தின் ஆளும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கள் ஆதரித்து வாக்களித்துள்ளனர். காங்கிரஸ், இடது சாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்துள்ளன. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இந்த சட்டத்திருத்தத்தின் மீதான விவாதத்தின்போது “இங்கே உள்துறை அமைச்சர் அடுத்த நான்கரை ஆண்டு களுக்கு ஆளுகிற அதிகாரத்தை மக்கள் எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள் என்று சொன்னார். உண்மை. மக்கள் ஆளுகிற அதிகாரத்தைத்தான் உங்களுக்கு வழங்கி யிருக்கிறார்களே தவிர, இந்தியாவை மத ரீதியான வெறுப்பின்பால் பிளக்கிற அதிகாரத்தை உங்களுக்கு வழங்கவில்லை” என்று மிகச்சரியாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவின் முன்னணி அறிவு ஜீவிகளான ரொமிலா தாப்பர், பிரபாத் பட்நாயக், ராமச்சந்திர குஹா போன்ற ஆயிரக்கணக்கானோர் குடியுரிமைச் சட்டம் (சீர்திருத்தம்) சட்ட முன்வரைவை வாபஸ் பெறக்கோரும் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். அது மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களில் அதை எதிர்த்து மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். இன்று நாடு முழுவதும் அந்த சட்ட முன்வரைவு பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
சட்டத் திருத்தத்தின் நோக்கம்
“இந்தியப் பிரிவினையின்போது ஒன்றுபட்ட இந்தியாவில் குடியிருந்த பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட லட்சக்கணக்கான மக்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளிலேயே தங்க நேர்ந்துவிட்டது. அந்த மூன்று நாடு களின் அரசியலமைப்புகளும் தங்களுக்கென்று அரச மதத்தை அங்கீகரித்துள்ளது. அதனால் அந்த மூன்று நாடு களில் குடியிருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத ரீதியாக துன்புறுத்தப் படுகிறார்கள். அதன் விளைவாக அவர்கள் அவரவர் மத நம்பிக்கைகளை பின்பற்ற முடியாமல் பயந்து வாழ்வதோடு அங்கிருந்து வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவேண்டிய அவசியத்தின் அடிப்படையில் இந்த சட்ட முன்வரைவு கொண்டு வரப்படுகிறது” என்று குடியுரிமை (சீர்திருத்தம்) 2019ன் சட்ட முன்வரைவின் நோக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
குடியுரிமைச் சட்டம் (சீர்திருத்தம்) சட்டமுன்வரைவு சொல்வது என்ன?
1. (குடியுரிமைச் சட்டம் 1955ல் பிரிவுகள் 2(b)(l), 6(B)(1)(2)(3)(4), 7(D)(i)(da), 18(2) (eei) மற்றும் மூன்றாவது அட்டவணையில் clause (d) ஆகிய பிரிவுகளில் கூடுதல் இணைப்பு மற்றும் சீர்திருத்தம் கோருகிறது. அதில் முக்கியமான திருத்தம் என்பது பிரிவு 2(b)(l) மற்றும் மூன்றாவது அட்டவணையில் செய்யப்படும் திருத்தங்களே. மற்றவை அனைத்தும் அவற்றை மேற்கொள்வதற்கான விதிமுறைகள். பிரிவு 2(b)(l) சீர்திருத்தப்படி 31.12.2014ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் எவ்வித சட்டப்பூர்வ ஆவணங்களுமின்றி நுழைந்துள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இனிமேல் சட்ட விரோதமாக குடியேறிய வர்கள் என்று கருதப்பட மாட்டார்கள் என்பதாகும். அவர்கள் அனைவரும் இனிமேல் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் என்கிறது.
எதிர்க்கப்படுவதன் காரணம்
1. அப்படி என்றால் இந்தியப் பிரிவினையின்போது பல்வேறு காரணங்களுக்காக தங்கள் உறவினர்களைப் பிரிந்தும் சொத்துக்களை இழந்தும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் தங்கிவிட நேர்ந்த இஸ்லாமியர்களின் நிலை என்ன என்ற கேள்விக்கும், பாகிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்படும் சிறுபான்மை ‘அகமது’ மற்றும் ‘போரா’ பிரிவு முஸ்லிம்களின் நிலை குறித்தும் அந்த சட்டத்திருத்தம் எதுவும் குறிப்பிடவில்லை. அதேபோல் மூன்றாவது அட்டவணை cl.(d) என்பது இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமை பெறுவதற்கு 12 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும் என்பதை மொத்தமாக ஐந்தாண்டுகள் இந்தியாவில் குடியிருந்தால் போதும் என்றும் திருத்தம் கோருகிறது. இது 12 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும் என்பதை குறைத்திருப்பதோடு தொடர்ச்சியாக என்பதை மொத்தம் ஐந்தாண்டுகள் என்றும், சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கோரியிருப்பது அரசின் உள்நோக்கத்தை வெளிக்கொணர்ந்துள்ளது.
2. மேலும் அந்த சட்ட திருத்த நோக்கத்தின்படி பார்த்தால் ஆப்கானிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்த நாடு அல்ல. அது நீண்ட நெடுங்காலமாக தனித்த நாடாகவே இருந்து வந்துள்ளது. அதோடு இந்தியாவை ஒட்டிய எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தாலும் ஆப்கானிஸ்தான் அதில் கிடையாது. ஒருவேளை ஆர்.எஸ்.எஸ்.இன் அகன்ற பாரதம் என்ற கோட்பாட்டில் ஆப்கானிஸ்தான் வருகிறதோ என்னவோ, உள்ளபடியே நம்முடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பர்மா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். பர்மா திட்டமிட்டு சேர்க்கப்படவில்லை. ஏனெனில் அப்படி பர்மாவையும் இணைத்து விட்டால் அங்கிருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள 40,000 ரோஹிங்யா இஸ்லாமிய அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழும் என்பதை தவிர்க்கவே பர்மா இணைக்கப்படவில்லை.
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நிலை
இந்த சட்ட முன்வரைவு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை மதமான இஸ்லாமியர்களால் மத ரீதியாக செய்யப்படும் துன்புறுத்தல்கள் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. பர்மா, இலங்கை ஆகிய நாடுகளில் அரசியல் மற்றும் இன ரீதியாக துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் அகதிகளாகி குடியேறியுள்ளவர்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பும்போது அவர்கள் இஸ்லாமியர்கள்; அவர்களுக்கு குடியுரிமை வழங்க ஏராளமான இஸ்லாமிய நாடுகள் உள்ளன என்று மலிவாக பதிலளிக்கப்படுகிறது. அதேபோல் பர்மா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து இன ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்டு இந்தியா வில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்கள் (இந்துக் களும், கிறிஸ்தவர்களும்) நிலை குறித்து கேட்கும்போது அரசு மௌனம் சாதிக்கிறது. அந்த இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவின் பூர்வ குடிகள் இல்லையா? அது மட்டுமின்றி இந்தியாவிலேயே உயர்சாதி பிராமண இந்துக்கள் தாங்கள் பசுவை புனிதமாக நம்புவதாகக் கூறி மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று தலித் இந்துக்களை அடித்துக் கொன்று வருகின்றனர். இது குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய் திறக்க மறுக்கிறார்கள். இவையெல்லாம் மத உணர்வு ரீதியிலான சித்ரவதையன்றி வேறென்ன என்ற கேள்வியும் எழுகிறது.
அரசியலமைப்புச் சட்டமும், குடியுரிமைச்சட்டமும்
இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடியுரிமை குறித்து சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் 1955ஆம் ஆண்டு குடியுரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி குடியுரிமையில் மதரீதியிலான பாகுபாடு எதுவும் கிடையாது. அதேநேரத்தில் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. ஆக நமது இந்திய அரசியலமைப்புச் சட்டமும், குடியுரிமைச் சட்டம் 1955ஆம், மதரீதியிலான குடி யுரிமை என்பதை நிராகரித்திருக்கிறது. இந்திய அர சியலமைப்புச் சட்டம் பிரிவு 14 மதரீதியிலான பாகுபாட்டை நிராகரிப்பதோடு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதையும் உத்தரவாதப்படுத்தியுள்ளது. அதற்காக குடி யுரிமை (சீர்திருத்தம்) சட்ட முன்வரைவு என்பது மதச்சார்பின்மைக்கு மட்டுமின்றி இந்திய அரசிய லமைப்புச் சட்டத்திற்கும் முரணானது என்ற வகையில் நீதி மன்றம் அதை ரத்து செய்து விடும் என்றும் நம்பு வதற்கில்லை.
ஆர்எஸ்எஸ்-சின் குடியுரிமைச் சட்டம் (திருத்தம்) முன்வரைவும்
ஆர்.எஸ்.எஸ்.சின் அடிப்படைக் கோட்பாடான இந்து ராஷ்டிரம் என்பதை குடியுரிமைச் சட்ட (திருத்தம்)முன்வரை வின் நோக்கமும், அதன் சீர்திருத்தம் கோரும் சட்டப் பிரிவுகளும் பிரதிபலிக்கின்றன. எனவே ‘இந்து ராஷ்டிரா’ என்பதை சட்ட ரீதியாக கடமைப்பதற்கான முன்னோட்டமே இது. மேலும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குறிப்பாக இந்துக்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது என்ற வகையில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்க ளாக்க மேற்கொள்ளும் முயற்சி. அதன் மூலம் இஸ்லா மியர்கள் உளவியல் ரீதியாக அச்சுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே காஷ்மீரில் அம்மக்கள் தன்னாட்சி கோரிய நிலையில் அம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இரண்டாகப் பிரித்துள்ளது மத்திய அரசு. அதோடு அம்மக்கள் தங்களது அடிப்படை சிவில் உரிமைகளுக்குக் கூட போராட முடியாத வகையில் உரிமைகள் மறுக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். அந்த வேளையில் இந்திய வரலாற்றையும், கல்வி முறையையும் இந்துத்துவ அடிப்படையில் திருத்தும் நடவடிக்கைகளை இந்த அரசு விரைந்து செய்து வரு கிறது. அதன் விளைவே புதிய கல்விக்கொள்கை என்பது. இவையெல்லாம் நாட்டின் பண்முகக் கலாச்சாரத்தை அழித்துவிட்டு ‘இந்துத்துவா’ என்ற ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கும் பாசிச நடவடிக்கைகளே.
வடகிழக்கு மாநிலங்களின் போராட்டம்
இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து அசாம், அருணாச் சலப்பிரதேசம், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் தன்னெழுச்சியான பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அம்மாநிலங்களில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இணைய சேவைகள் முடக்கப்பட்டிருப்பதோடு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் அது செய்து வந்த தேயிலை, எண்ணெய் மற்றும் யானை முதலிய வர்த்தகத்தை தன்னுடைய ஏகபோக கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக அந்நியர்களை தடை செய்து, “வங்காள கிழக்கு எல்லைப்பகுதி கட்டுப்பாடு 1873” (Bengal Eastern Frontier Regulation 1873) என்ற சிறப்பு சட்டத்தை இயற்றியது. அதோடு அந்த மாநிலத்தவர் அல்லாத மற்ற இந்திய குடிமக்கள் அங்கு செல்ல உள்ளூர் அனுமதி (Inner Line Permit) பெற வேண்டும். ஆனால் பிரிட்டிஷார் வெளியேறிய பின்பும் அங்கு வாழும் பழங்குடி மக்களின் தனித்தன்மை, இயற்கை வளங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் பறிபோய் விடக்கூடாது என்பதற்காக இன்றும் அந்த நடைமுறை தொடர்கின்றது. அதேபோல் அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 244(2) மற்றும் ஆறாவது அட்டவணை ஆகியவை அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங் களில் வாழும் பழங்குடி மக்களின் தனித்தன்மையை பாது காக்கும் வகையில் தன்னாட்சி பெற்ற மாவட்டக் கவுன் சில்கள் மற்றும் தன்னாட்சி பெற்ற பகுதி கவுன்சில்கள் மூலம் நிர்வகிப்பதற்கான சிறப்பு அந்தஸ்தை உத்தரவாதப் படுத்தியுள்ளது.
அதனடிப்படையில் அசாமில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரி பெரும் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் ஒப்பந்தம் 1985ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய குடியுரிமைச் சட்டம் மேலே சொன்னவற்றை நீர்த்துப் போகச் செய்யும். பல லட்சக்கணக்கான மக்கள் அந்த மாநிலங்களில் குடியேற்றப்படுவதன் மூலம் பெரும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதோடு அவர்களுடைய வேலை வாய்ப்பு களும் பறிக்கப்பட்டுவிடும். பழங்குடி இன மக்களான தங்கள் தனித்தன்மை இழக்கப்படும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய நியாயமான அச்சத்தைப் போக்க மத்திய அரசு தவறிவிட்டதன் விளைவே பெரும் போராட்டங்கள்.
தேசியக் குடியுரிமை பதிவேடு
சமீபத்தில் அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற தேசிய குடியுரிமை பதிவேடு தயார் செய்யப்பட்டது. பல லட்சம் மக்கள் குடியுரிமை பதிவேட்டில் போதிய ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தினால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கையான அதே நேரத்தில் வேதனையான விசயம் என்னவென்றால், இந்திய ராணுவத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும் இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் பெயரும், அசாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரின் பெயரும் விடுபட்டுள்ளன என்பதே. இவையெல்லாம் சிறு உதார ணங்கள். இதுபோல் அசாமில் 19 லட்சம் மக்களின் பெயர்கள் தேசியக்குடியுரிமை பதிவேட்டில் விடுபட்டு அகதிகளாகியுள்ளனர். இந்நிலையில் குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தேசிய குடியுரிமை பதிவேட்டை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அப்படி தேசிய குடியுரிமை பதிவேட்டில் பதிவு செய்ய போதிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டால் நாளை நீங்களும் நானும் சொந்த நாட்டில் அகதிகளாக்கப் படலாம்.
கட்டுரையாளர் : தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர்