tamilnadu

img

நலவாரிய உறுப்பினர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை துரிதமாக வழங்குக....  ஆட்சியரிடம் சிஐடியு கோரிக்கை மனு

சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் நலவாரிய உறுப்பினர்களுக்காக அரசு அறிவித்த ரூ.2 ஆயிரத்தையும், உணவு பொருட்களையும் துரிதமாக வழங்க கோரி சிஐடியு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
சிஐடியு மாவட்ட செயலாளர் வீரையா,சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் தெட்சிணாமூர்த்தி, ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜயகுமார், சாலையோர தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் உலகநாதன்,விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வேங்கையா ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ,ஆட்டோ ,சாலையோர வியாபாராம்,போக்குவரத்து, சுமைப்பணி ,தையல்,பனைஏறும் தொழிலாளி  உள்ளிட்ட முறைசார தொழிலாளர்கள் சுமார் ஒன்றறை லட்சம் பேர்  இம்மாவட்டத்தில் உள்ளார்கள். இதில் 35ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.இவர்களில் தற்போதுவரை 10ஆயிரத்திற்கு குறைவான நபர்களுக்கு மட்டுமே கொரோனா நிவாரண நிதி தொழிலாளர் நலத்துறை வழங்கியிருக்கிறது. அரசு அறிவித்து 3வாரங்களுக்கு மேல் ஆகியும் பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு இதுவரை எந்தவித உதவியும் வழங்கப்படாத நிலை உள்ளது.

கொரோனா ஊரடங்கால் எந்தவேலைக்கும் செல்லாமல் வீட்டில் பசி,பட்டினியோடு முடங்கி கிடக்கின்றனர்.முறைசாரா தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிதி நிவாரணம் ரூ2ஆயிரமும்,உணவு பொருட்களும் உடன் வழங்க வேண்டும். மேலும் தொழிலாளர் நல அலுவலகத்தில் பதிவு செய்த அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தொழிலாளர் நல அலுவலகத்தில் பதிவு செய்யாத முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நிவாரண  உதவிகள் கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க   வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.