districts

img

அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை மனு  

அவிநாசியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வாலிபர் சங்கத்தினர் சார்பில் வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.  

அவிநாசி பேரூராட்சி முத்து செட்டிபாளையம் பகுதியில், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில்  30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை, காங்கிரட் தளம் இன்றி சிமெண்ட் சீட் போடப்பட்டுள்ளது. மேலும் மேற்கூரை பழுதடைந்து காணப்படுவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

அதனைதொடர்ந்து உடனடியாக மேற்கூரையில் முளைத்துள்ள செடிகளை அப்புறப்படுத்தி, அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர வேண்டும்.  மேலும் அங்கன்வாடி மையத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும்.

இதேபோல தாமஸ் வீதி, வ உ சி வீதி பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் விரைவில் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தரப்படும் என தெரிவித்தனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ், வாலிபர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் வடிவேல், பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.