சேலம்:
சேலம் அருகே காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதில் மளிகைக்கடைக்காரர் உயிரிழந்த சம்பவத்திற்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் கடையை தமிழக அரசு திறந்துள்ளது. இதனிடையே மதுப்பிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் செவ்வாயன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை கிராமத்திற்கு சென்று மது அருந்தி விட்டு பின்னர் கல்வராயன்மலை வழியாக வீடு திரும்பியுள்ளனர். அப்போது ஏத்தாப்பூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார், இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்தவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது போலீசாருக்கும் குடிபோதையில் வந்தவர்களுக்கு மிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது காவல் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் உடனிருந்த போலீசார், குடிபோதையில் இருந்த முருகேசனை பிரம்பால்தாக்கியுள்ளனர். அதில் முருகேசன் மயங்கி கீழே விழுந்துள்ளார். முருகேசனை போலீசார் பிரம்பால் தாக்குவதை சக நண்பர் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றி யுள்ளார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.இந்நிலையில், போலீசார் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்த முருகேசனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, சேலம் அரசு மருத்துவ மனை முன்பு உறவினர்கள் குவிந்தனர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த முருகேசனுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். சேலம் அரசு மருத்துவமனை முன்பு குவிந்த உறவினர்கள் கதறி அழுதனர்.
சிபிஎம் கண்டனம்
காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு சிபிஎம் சேலம் மாவட்டக் குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. முருகேசன் என்பவரை கண்மூடித்தனமாக தாக்கி அவரின் இறப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் அவருடன் இருந்த காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண உதவி அளிக்க வேண்டும், அவரது மனைவிக்கு கல்வி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். சேலம்மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, காவல் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.