சாயல்குடி பகுதியில் பெய்த கனமழையால் அரசு உப்பளத்தில் உப்புகள் நனைந்து வீணாகியுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
சாயல்குடி, வாலிநோக்கம் பகுதியில் அரசுக்கு சொந்தமான உப்பு நிறுவனம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சேமிக்கப்பட்ட உப்புகள் நனைந்து கரைந்துள்ளது. இதற்கு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்காததே காரணமாக கூறப்படுகிறது. இந்த அலட்சியத்தால், சேமிக்கப்பட்ட உப்புகளை முறையாக கவனிக்க முடியாமல் உப்புகள் வீணாகியுள்ளது. இச்செயலினால் அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டு, உப்பு உற்பத்திக்கு தேவையான இருப்பு குறைந்துள்ளது. இதனால் தொழிற்சாலைகள் இயங்காமல் தொழிலாளர்களின் வேலைகள் கேள்விக்குறியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் உப்பளத்தை காத்திட, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.