இராமநாதபுரம்:
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி வெளியிட்டுள்ள அறிக்கையில். கூறியிருப்பதாவது:
ஊரடங்கு உத்தரவினால் வருமானமின்றி தவிக்கும் நல வாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் பதிவை புதுப்பிக்காத தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அரசு இரண்டு கட்டங்களாக அறிவித்த நிவாரண நிதி முழுமையாக கிடைக்க தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு முதற்கட்டமாக அறிவித்த ரூபாய் 1000 மற்றும் உணவுத் தொகுப்பு, இரண்டாம் கட்டமாக அறிவித்த நிவாரணத் தொகை ஆகியவை அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முறையாக சென்று சேரவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன. நலவாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்கள் மட்டுமல்லாது, நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்களும் ஊரடங்கு உத்தரவினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.எனவே நலவாரியத்தில் பதிவு செய்யாத அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நிவாரண தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற பேரிடர் காலங்களில் நல வாரியத்தின் புதுப்பிப்பு நடைமுறைகளை எளிதாக்கி,தானியங்கி முறையில் பதிவை புதுப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களின் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
எனவே தமிழக அரசு இரண்டு கட்டமாக அறிவித்த நிவாரண தொகை மற்றும் உணவுத்தொகுப்பை நலவாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் நலவாரிய பதிவை புதுப்பிக்காத தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கிட முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு அறிவித்த ரூ.1000 நிவாரணத்தொகை தற்போது இருக்கும் விலைவாசி மற்றும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லை. எனவே, இதனை உயர்த்தி தரவும் அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.