விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்
சென்னை,செப்.22- விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர், நாங்குநேரி தொகுதியில் போட்டி யிடும் காங்கிரஸ் வேட்பாளர்க ளுக்கு ஆதரவு அளிக்கப் போவ தாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளையும், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகள் ரத்து செய்ய ப்பட்டது உட்பட மாநில உரிமை களை பறிக்கும் ஜனநாயக விரோதக் கொள்கைகளையும், இந்தி மொழி திணிப்பு போன்ற அத்துமீறல்களையும் எதிர்த்து மதச்சார்பற்ற ஜனநாயக, இடது சாரி கட்சிகள் ஒருங்கிணைந்தும், தனித்தும் போராடி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விக்கிர வாண்டி மற்றும் நாங்குநேரி சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தும் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் பாடுபடுவது எனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு முடிவு செய்துள்ளது என்று கூறியு ள்ளார்.
வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கை யில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் முறையே தி.மு.க. மற்றும் காங்கிரஸ்கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு மதிமுக பாடுபடும். தமிழகத்தை எல்லா வகையிலும் வஞ்சித்து வருகிற மத்திய பா.ஜ.க. அரசின் துரோகங்களுக்கு துணையாகச் செயல்படும் எடப்பாடி பழனி சாமி அரசுக்கு இடைத் தேர்தலில் மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள். நாடு முழுவதும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலை யில், அதிமுக அரசு புதிய கல்விக் கொள்கையை முந்திக்கொண்டு நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது. மாநில உரிமைகள் அனைத்தையும் தில்லியின் காலடியில் அடகுவைத்துவிட்டு அடிமைச் சேவகம் புரியும் எடப்பாடி பழனிசாமி அரசை ஆட்சிப் பீடத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முஸ்லீம் லீக்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகி தீன் விடுத்துள்ள அறிக்கையில் விக்கிரவாண்டி, நாங்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளார்.