புதுக்கோட்டை:
புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியில் கடந்த 7 ஆண்டுகளாக எச்டிபி என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு நகைக் கடன் மற்றும் தனிநபர் கடன்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் இந்த தனியார் நிதி நிறுவனத்தில் தற்போது ஆண்டு தணிக்கை நடைபெற்று வந்துள்ளது. அப்போது வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த ரூ.91 லட்சத்து 68 ஆயிரத்து 750 மதிப்பிலான 305.625 சவரன் தங்க நகைகள் இருப்பில் இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிதி நிறுவன அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வங்கியில் பணியாற்றிய 3 பேர் இந்த கையாடலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தங்களது நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடி கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளர் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை கிளை அலுவலகத்தில் தங்க நகை கடன் பிரிவில் பணியாற்றி வரும் சோலைமணி (37), தனிநபர் கடன் பிரிவில் பணியாற்றி வரும் முத்துக்குமார் (28), கிளை மேலாளர் உமாசங்கர் (43) ஆகிய 3 பேர் மீது புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் கையாடல் செய்யப்பட்ட நகைகள் புதுக்கோட்டையில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தில் (இன்டல் மணி) பணிபுரியும் மேலாளர் மற்றும் பெண் ஊழியர் உதவியுடன், அதே நிறுவனத்தில் 77 முறை சிறுக சிறுக கடந்த 2019 டிசம்பர் முதல் அடகு வைத்திருப்பது தெரியவந்தது.மேலும் ஒவ்வொரு முறையும் எச்டிபி தனியார் நிதி நிறுவனத்திற்கு ஆடிட்டிங் வரும்பொழுது முன்கூட்டியே தகவல் தெரிவதால், அடகு வைக்கப்பட்ட நிதி நிறுவனத்திலிருந்து அந்த சமயம் மட்டும் நகைகளை ஆடிட்டிங் வருபவர்களிடம் காட்டிவிட்டு, பின்னர் மீண்டும் கொண்டு சென்றதாகவும், தற்போது எந்த ஒரு தகவலும் சொல்லாமல் திடீரென ஆடிட்டிங் வந்ததால், நகை கையாடல் செய்தது தெரிந்து விட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் அழைத்துக்கொண்டு நகைகளை அடகு வைத்த மற்றொரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக நகை அடகு வாங்கிய நிதி நிறுவனத்தை சேர்ந்த மேலாளர் மற்றும் பெண் ஊழியரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.