tamilnadu

img

200 கிமீ நடந்து வந்த தொழிலாளர்களை வாகனம் மூலம் அனுப்பி வைத்த காவல்துறையினர்

புதுக்கோட்டை
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகள் இராமநாதபுரம் மாவட்டம் தாமோதிரபட்டிணத்தில் உள்ள தனியார் இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் ஊரடங்கு உத்தரவிற்குப் பிறகு இறால் பண்ணையை  விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர். மேலும் இறால் பண்ணையில் வேலை முடிந்ததால் ஓரிரு வேளைகள் மட்டுமே உணவு உண்டு நாட்களை கடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில்  14 ம் தேதியோடு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று எதிர்பார்த்திருந்த அவர்கள் ஊரடங்கு தொடரும் என்ற அறிவிப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இனிமேலும் தாமதித்தால் நிலைமை மோசமாகி விடும் என்று எண்ணிய கூலித் தொழிலாளிகள் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு நடந்தே  செல்வது  என்று முடிவு செய்து  செவ்வாய் அதிகாலை 3 மணிக்கு தாமோதிரபட்டிணத்திலிருந்து நடைபாதையாக கிளம்பியுள்ளனர். அங்கிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோட்டைப்பட்டிணம் சோதனைச் சாவடி அருகே கூலித் தொழிலாளிகள் நடந்து செல்கையில்  பணியிலிருந்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் அவர்களை அழைத்து விசாரித்துள்ளார். பசியும் பட்டினியுமாக வந்த கூலித் தொழிலாளிகளுக்கு  உணவு வழங்கி பின்பு அவர்களை பத்திரமாக டாட்டாபிக்கப் வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். காவல்துறையினரின் இச்செயல் பொதுமக்களிடையே வெகுவாக பாராட்டப்படுகிறது.