புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட சிறை அருகே சிறைத்துறையின் சார்பில் பெட்ரோல் பங்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில், தண்டனைக் கைதிகளில் நல்லொழுக்கம் பெற்ற 25-க்கும் மேற்பட்ட சிறை வாசிகள் பணியாற்றி வருகின்றனர்.இந்த பெட்ரோல் பங்கிற்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்ப வந்த புதுக்கோட்டை அருகே உள்ள பரம்பூரை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் பெட்ரோல் நிரப்பிவிட்டு, அவருடைய கைப்பையை அங்கேயே தவறவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த கைப்பையை கண்ட பங்கில் பணியாற்றி வரும் புஷ்பகுமார் மற்றும் கார்த்திக் ஆகிய இரு கைதிகள் எடுத்து அதை சோதனை செய்தனர். அதில், பணம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 கைதிகளும் அந்த பணத்தை பணியில் இருந்த சிறைத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பணப்பையை சோதனை செய்ததில், அதில் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் மற்றும் ஒரு துண்டு சீட்டு செல் நம்பருடன் இருந்தது. இதைத்தொடர்ந்து ஜானகிராமனை பெட்ரோல் பங்கிற்கு வரவைத்த போலீசார், பணத்தை அவரிடம் வழங்கினார்கள்.இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரிய தர்ஷினி பணத்தை எடுத்து கொடுத்த 2 கைதிகள் மற்றும் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோலீசாரை பாராட்டினார்.