பெரம்பலூர், மே 4-அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலர் வீ.அமிர்த லிங்கம், பெரம்பலூர் துறைமங்கலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- பெரம்பலூர் மாவட்ட த்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து குடியிருப்புகளுக்கும் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும். பாரம்பரியமான நமது நீர்நிலைகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பெரம்பலூரிலும், தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. இதுவரை, பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டு இத்திட்டப் பணிகள் பல கிராமங்களில் தொடங்கப்படவில்லை. இதனால் கிராமப்புற மக்கள் பலர் மிகவும் கஷ்டப்படுகின்றனர். சில கிராமங்களில் வேலை வழங்காமல் மோசடியாக வேலை செய்ததாக பணம் எடுத்து முறைகேடு செய்துள்ளனர்.தேர்தல் நாளன்று விடுப்புடன் கூடிய ஊதியம் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பெரும்பாலான விவசாய கூலிகளுக்கு கிடைக்கவில்லை. தேர்தல் தின விடுமுறைக்கான ஊதியம் கிடைக்க ஊரக வளர்ச்சி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஏழை மக்களுக்கும் உடனடியாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வீ.அமிர்தலிங்கம் கூறினார். பேட்டியின் போது மாவட்டச் செயலர் பி.ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.