பெரம்பலூர், ஆக.17- பொது இடத்தில் காவல் ஆய்வாளரை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்த, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நலச் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கண்ணன் தலைமையிலான ஓய்வுபெற்ற காவல்துறையினர் அளித்த மனுவில், கடந்த 9 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், அத்திவரதர் தரிசனம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பி.ரமேஷ் என்பவரை ஒருமையில் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினார். மேலும், அவரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டினார். இதுகுறித்து வீடியோ பதிவு வெளியாகியதால் அந்த ஆய்வாளர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். எனவே, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.