காங்டோக், ஜுன் 18- சிக்கிமில் கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். சிக்கிமின் வடக்குப் பகுதியில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளமாக பெருக்கெடுத்தது. ஏற்கெனவே லேச்சன் பகுதியில் இருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முன்னெச்சரிக்கையாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சங்க்தங்-லேச்சன்-தங்கு சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. ஸிமா என்ற இடத்தில் மட்டும் 250 முதல் 300 சுற்றுலாப் பயணிகள் வரை சிக்கிக் கொண்டு நீர் சூழ்ந்த விடுதிகளில் இருந்த வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.