புவனேஸ்வரம், மே 3-ஒடிசாவில் அதிபயங்கர சூறாவளி காற்று வீசிய நிலையில் பானி புயல் வெள்ளியன்று கரையை கடந்தது. இது மேற்குவங்கத்தை நோக்கிச் செல்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் கடந்த 10 நாட் களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இரு நாட்களில் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து அது புயலாக மாறியது. சுழற்சி முறை அடிப்படையில் வங்கதேசம் அளித்திருந்த “பானி” என்ற பெயர் அந்த புயலுக்கு சூட்டப்பட்டது. இலங்கை அருகே வந்தபோது அந்த புயலின் நகர்வு திசையை கவனித்த வானிலை ஆய்வுநிபுணர்கள், தமிழகத்தை பானி புயல் தாக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். குறிப்பாக பானி புயல் சென்னையை தாக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் கடந்த சனிக்கிழமை பானி புயல் வடக்கு மற்றும் வட கிழக்கு நோக்கி திரும்பியது. இதனால் பானி புயல் தாக்கும் அபா யத்தில் இருந்து தமிழகம் தப்பியது. ஆந்திர கடலோரம் நோக்கி பானி புயலின் பயணப் பாதை இருந்தது. இதனால் ஆந்திராவை பானி தாக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை பானி புயலின் பாதையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டு திசை மாறியது. வங்கக் கடலில் மேலும் வடக்கு திசைக்கு சென்று பிறகு அது மேற்கு திசைக்கு மாறியது. இதையடுத்து பானி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடக்கும் என்பது கடந்த 1-ந்தேதி உறுதியானது. வியாழன் மாலை ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் பானி புயல் மையம் கொண்டிருந்தது.
இந்நிலையில் பானி புயல் ஒடிசா மாநிலத்தில் பூரி நகரின் தெற்கு பகுதியில் கோபால்பூர் - சந்த்பாலி இடையே வெள்ளியன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கணித்திருந்தனர். வெள்ளியன்று பிற்பகல்தான் பானி புயல் ஒடிசாவை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வியாழன் இரவு பானி புயல் நகர்வில் திடீரென வேகம் அதிகரித்தது. முதலில் தீவிர புயலாக கருதப்பட்ட பானி புயல் பிறகு அதிதீவிர புயலாக மாறியது. வேகம் அதிகரித்ததால் மிக அதி தீவிர புயலாக மாறி பானி புயல் சீற்றம் அடைந்தது. இந்தியாகடந்த 43 ஆண்டுகளில் சந்தித்திராத மிக, மிக அதி பயங்கரமான புயலாக பானி புயல் மாறி இருந்தது. கஜா, வர்தா போன்ற புயல்களை விட மிக மிக சக்தி வாய்ந்ததாக பானி புயல் இருக்கும் என்ற சிவப்புஎச்சரிக்கை விடப்பட்டது.
வழக்க மான புயல்களை விட பானி புயலின் நீள அளவு அதிகமாகும். எனவே கரையை கடக்கும்போது ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பானி புயல் சுழன்ற டித்து கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர். அதன்படி பானி புயல் வியாழன்இரவே ஆந்திரா, ஒடிசா மாநிலங்களின் கரையோரத்தை நெருங்கியது. இதனால் இந்த மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் பெரும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதற்கிடையே நகர்வு வேகம் அதிகரித்ததால் வெள்ளி பிற்பகலுக்கு பதில் முற்பகலிலேயே - அதாவது காலையிலேயே பானி புயல் ஒடிசாவை தாக்கும் என்று வானிலை இலாகா அதிகாரிகள் அறிவித்தனர். அதன்படி வெள்ளி காலை 8.30 மணி அளவில் ஒடிசா மாநிலத்தில் பானி புயல் கரையை கடக்கத் தொடங்கியது. அந்த சமயத்தில் பயங்கரமான சூறாவளி காற்று வீசியது. மிக, மிக பலத்த மழையும் பெய்தது. பானி புயல் வரலாறு காணாத வகையில் மிக நீளமான ஒன்றாக இருந்தது. இதனால் ஒரு இடத்தை கடப்பதற்கு பானி புயல் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. ஒடிசா கடற்கரையை பானி புயலின் தலைப்பகுதி எட்டியபோது அதன் வால் பகுதி கடலுக்குள் இருந்தது. அந்த அளவுக்கு பானி புயலின் நீளம் காணப்பட்டது. ஒடிசா கடலோரப் பகுதிகளை கடப்பதற்கு பானி புயல் சுமார் 3 மணி நேரம் எடுத்துக் கொண்டது. இதனால்பானி புயல் கடந்து சென்ற பகுதி களில் அதிகப்படியாக துவம்சம் செய்தது. வெள்ளியன்று அதிகாலை 5.30 மணிக்கு பூரி நகரம் அருகே உள்ள கோபால்பூரில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் கடலில் இருந்த புயல் அடுத்த 3 மணி நேரத்துக்குள் கரையை எட்டி விட்டது குறிப்பிடத்தக்கது. பானி புயல் கரையைக் கடக்கும்போது 200 முதல் 230 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றுமுதலில் கூறப்பட்டது. ஆனால் புயல் இன்று காலை கரையை கடந்த போது பூரி மாவட்ட தென்பகுதியில் மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கைப் பிரிவு பொறுப்பாளர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா தெரிவித்தார்.
சில பகுதிகளில் மணிக்கு 175 கிலோ மீட்டர் முதல்220 கிலோ மீட்டர் வேகத்துக்கு சூறாவளி காற்று வீசியது.அப்போது புயலின் கண் என்று அழைக்கப்படும் மையப் பகுதி சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைதியாக சுழன்றபடி இருந்தது. பகல் 11 மணி அளவில் பானி புயல் முழுமையாக கடலில் இருந்து ஒடிசா மாநில தரைப்பகுதிக்குள் வந்திருந்தது. அதன் பிறகு புயலின் சீற்றம் மெல்ல மெல்ல குறைந்தது. என்றாலும் மணிக்கு 100 கிலோ மீட்டருக்கு மேல் சூறாவளி காற்று வீசியதால் பாதிப்பு ஏற்பட்டது. பானி புயல் தாக்கும் என்று 3 நாட்களுக்கு முன்பே திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு விட்டதால் ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக செய்ய முடிந்தது. இதன் காரணமாக உயிரிழப்பு சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 6 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வெள்ளியன்று மாலை வரை பானி புயல் ஒடிசா மாநிலத்தில் இருக்கும்; இரவு அது மேற்கு வங்க மாநில பகுதிக்குள் செல்லும். சனிக்கிழமை காலை கொல்கத்தா அருகே புயல் மையம் கொண்டிருக்கும். அதன் பிறகு வங்க தேசத்துக்குள் பானி புயல் நுழையும். சனி முழுவதும் அந்த நாட்டின் வழியாக வட கிழக்குதிசையில் பானி புயல் நகரும். 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அசாம் மாநிலத்தை பானி புயல் எட்டும். அன்றுபானி புயல் வலு இழக்கும் என்று எதிர் பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.