tamilnadu

img

மாதர் சங்க நடைபயணம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது...?

வன்முறையற்ற தமிழகம்; போதையற்ற தமிழகம் எனும் முழக்கங்களை முன்வைத்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மகத்தான நடை பயணத்தை நடத்தி வருகிறது. இந்த நடை பயணம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே தமிழகத்திலும் தெலுங்கானா உட்பட பல மாநிலங்களி லும் பெண்கள் மீது வன்முறைகள் நடத்தப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளன. மாதர் சங்கத்தின் நடைபயணம் ஏன் அவசியம் என்பதை இந்த கொடூர சம்பவங்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளன.
தமிழகத்தில்
தமிழகத்தில் கோவையில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நான்கு தினங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கொண்டாட தனது நண்பனுடன் பள்ளி மாணவி சென்றுள்ளார். சுமார் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் இருவரையும் ஆளில்லாத பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். அங்கு நண்பனை தாக்கி அவரை நிர்வாண மாக்கி காணொலி பதிவு செய்துள்ளனர். பின்னர் மாணவி யை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையும் புகைப்படம் எடுத்துள்ளனர். நடந்தவற்றை வெளியில் சொன்னால் புகைப்படங்களையும் காணொளியையும் வெளியிடுவோம் என மிரட்டி யுள்ளனர். (தமிழ் இந்து/01.12.2019) அன்று இரவு தனது நண்பனின் வீட்டில் தங்கிய மாணவி அடுத்த நாள் தனது வீட்டுக்கு சென்று தனது தாயிடம் நடந்தவற்றை கூறினார். பின்னர் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. டி.ராகுல் (21), ஆர்.பிரகாஷ்(22), எஸ்.கார்த்திகேயன்(28), எஸ்.நாராயண மூர்த்தி(32) ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். தனக்கு நேர்ந்த கொடுமையை மறைக்காமல் காவல்துறையிடம் புகார் கொடுத்த மாணவியும் அவரது  தாயும் பாராட்டுக்குரியவர்கள். ஏனெனில் பல இத்தகைய கொடுமைகள் வெளிச்சத்திற்கு வராமலேயே போய்விடு கின்றன. குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி புகார் தரப் படாமல் புதையுண்டு விடும் வன்முறைகள் ஏராளம். எனவேதான் இந்த கொடுமையை புகார் அளித்த தைரியம் நிச்சயம் பாராட்டுக்குரியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு தலித் பெண், இடைநிலை சாதியை சேர்ந்த தனது காதலனாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் செய்திகள் வெளி வந்துள்ளன.
மதவாதிகளின் நீசத்தனமான அணுகுமுறை
அண்டை மாநிலமான தெலுங்கானாவில் கால்நடை  பெண் மருத்துவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மட்டுமல்ல; எரித்து கொலையும் செய்யப் பட்டுள்ளார். தெலுங்கானா மட்டுமல்லாது தேசம் முழுதுமே இந்த கொடூர சம்பவம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. எனினும் இத்தகைய அதிர்வலை களை ஏற்படுத்தாமல் நடக்கும் வன்முறைகள் ஏராளம். உதாரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கரில் 14 வயதுடைய பழங்குடி மாணவி கும்பல் பலியல் வன்முறக்கு உள்ளாக்கப்பட்டார். இது செய்தியாக மட்டுமே வெளி வந்தது. தெலுங்கானா கொடூரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங் பரிவாரத்தை சேர்ந்த  சிலர் இந்த வன்முறைக்கு மதச்சாயம் பூச முயல்கின்ற னர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் பெயர் முகம்மது ஆரிஃப். எனவே இந்த கொடூர சம்பவத்தை முஸ்லீம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக திசை திருப்ப முயல் கின்றனர். சமூக ஊடகங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்த கொலை சம்பவத்தை பயன்படுத்துகின்றனர். எளிய இந்து மக்களிடம் இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்தை உருவாக்க முயல்கின்றனர். இந்த கொலையில் கைது செய்யப்பட்டள்ள மற்றவர் கள் ஜொல்லு சிவா, ஜொல்லு சீனு, சென்ன கேசவலு ஆகியோர் ஆவர். இந்த விவரங்களை தெலுங்கானா காவல்துறை வெளியிட்டுள்ளது. (ஆதாரம்: வயர் மின் இதழ்/30.11.2019) இந்த கொடூர சம்பவம் என்பது பெண்களுக்கு எதிரானது; இந்த சமூகத்தில் தனக்கு பாதுகாப்பு உண்டு என நம்பிய ஒரு மருத்துவரின் நம்பிக்கையை குழி தோண்டி புதைத்த கொடும் மனிதத் தன்மையற்ற குற்றம் என உள்வாங்கி கொள்வதற்கு பதிலாக இந்த சம்பவத்தையும் தமது மதவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முயல்வோரை என்னவென்று சொல்வது? இதே போல ஓரிரு இஸ்லாமியர் பெயர்களில் சமூக ஊடகங்களில் செய்யும் பதிவும் பொருத்தமற்றதாக உள்ளது. தெலுங்கானா போன்ற கொடூரமான நிகழ்வுகள் சமூகம் இஸ்லாமிய திசையில் செல்ல வேண்டிய அவ சியத்தை வெளிப்படுத்துவதாக இந்த பதிவு முன்வைக் கிறது. பெண்கள் வயதுக்கு வந்ததும் திருமணம் செய்ய வேண்டியதன் அவசியம், பர்தாவின் முக்கியத்துவம், இஸ்லாமில் உள்ள எளிதான திருமண விலக்கு ஆகியவை பாலியல் வன்கொடுமை போன்றவற்றை தடுக்கும் என கூறப்படுகிறது. இத்தகைய பதிவுகள் சங்பரிவாரத்தினருக்கு எதிர்வினை ஆற்ற பயன்படும் என்பது மட்டுமல்ல; உண்மை  அல்ல என குறிப்பிடுவதும் அவசியம் ஆகும். பாலியல்  தொல்லைகளுக்கு உள்ளான பர்தா அணிந்த முஸ்லீம்  பெண்களும் உண்டு. இந்தியாவில் திருமண விலக்கு பெரும் பாலும் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராகவே அமை கின்றன என்பதே அனுபவம். இந்த முரண்பாட்டையே முத்தலாக் சட்ட திருத்தம் மூலம் முஸ்லீம் ஆண்களுக்கு எதிராகவும் ஒட்டு மொத்தமாக முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிராகவும் பயன்படுத்த மோடி அரசாங்கம் முனைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது மதங்களையும் சாதிகளையும் கடந்தது. எந்த மதமும்  சாதியும் விதிவிலக்கு அல்ல. பூலான் தேவி பிற்படுத்தப் பட்ட சமூகத்தை சேர்ந்தவர்தான். ஆனால் அவருக்கு எதிராக உயர்சாதியினர் அரங்கேற்றிய கொடுமை கொஞ்சமல்ல! எனினும் வன்முறைகளுக்கு அதிகமாக இலக்காவது தலித் மற்றும் ஆதிவாசி பெண்கள்தான் என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மனைவியை அடிப்பதில் தவறு இல்லை என கூறும் 71% ஆண்கள்!  பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல வடிவங்கள் எடுக்கின்றன. வரதட்சணை படுகொலைகள்/ ஆணவ படுகொலைகள்/ பெண் சிசு படுகொலை/ பாலியல் வன்கொடுமை/ கடத்தல் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல்/ குடும்ப வன்முறை/ அமில வீச்சு என நீண்ட பட்டியல் இடலாம்.  சமீபத்தில் நிதி ஆயோக் நடத்திய ஆய்வில் 12ம் வகுப்பு வரை படித்த ஆண்களில் 71% பேர் மனைவியை அடிப்பதில் தவறு இல்லை என கூறுகின்றனர். பொள்ளாச்சி யில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நடிகர் பாக்யராஜ் கருத்து எவ்வளவு மோசமானது என்பதும் அது கடுமையான விமர்சனத்தை விளைவித்த தும் சமீப அனுபவம். இத்தகைய சிந்தனைகள் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருப்பது கவலை தரும் அம்சமாகும். ஆகவே பெண்களுக்கு எதிரான வன்முறையின் வேர் பாலின சமத்துவமற்ற சமூகத்தில் ஆழமாக பொதிந்து உள்ளது. இந்திய சமூகத்தில் பாலின சமத்துவம்  என்பது மிகப்பெரிய சவால். அந்த சவாலை சந்திப்பதில்  ஜனநாயக மாதர் சங்கத்தின் நடை பயணம் ஒரு திருப்பு முனை எனில் மிகை அல்ல! தெலுங்கானா பெண் மருத்து வர் படுகொலையும் கோவை பாலியல் வன்முறையும் இத்தகைய இயக்கங்களின் இடைவிடாத தேவையை மீண்டும் மீண்டும் நிரூபித்த வண்ணம் உள்ளன. 

-அ.அன்வர் உசேன்