tamilnadu

img

ஆறாம் திணையாகவும் வளரும் தமிழ்! - நா.முத்துநிலவன்

மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்பு மொழி. கருத்துப் பகிர்வுக்காகவே மொழி தோன்றினாலும், அதுவே அந்தந்த மொழியைப் பேசுவோரின் பண்பாடு, தேசிய இன அடையாளமாகவும் பரிணமித்தது. மனித சமூக முன்னேற்றத்திலிருந்து மொழியைப் பிரித்துப் பார்க்க முடியாது! மொழிவழி மாநில வரலாறு இன்றும் முக்கியமாகிறது! ஆங்கிலேயர் வருவதற்கு முந்திய, இந்தியப்பகுதி, ஐநூறு சிறிய, பெரிய நாடுகளாக இருந்தது. இங்கு, ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தாய்மொழிகளும் அவற்றின் கிளைமொழிகளும் பேசப்பட்டன! தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு மொழிகளைப் பேசிய மக்கள் வாழ்ந்த தென்னிந்திய நிலப்பகுதி,  “மதராஸ் ராஜதானி” (மெட்ராஸ் ஸ்டேட்) என்ற ஒரே மாநிலமாக இருந்தது, இந்தியா விடுதலை பெற்ற ஒன்பது ஆண்டுகள் வரையும் இது தொடர்ந்தது. உண்மையில் இந்தநிலப் பகுதிதான் பழந்தமிழர் வாழ்ந்த –தொல்காப்பியப் பாயிரத்தில் சொல்லப்பட்ட- “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகு” என்பதும் நினைக்கத் தக்கது!

ஆர்எஸ்எஸ்சில் அரசியல் பிரிவான பாஜக இந்த மொழிவாரி பிரிவினைக்கு அன்றும் இன்றும் எதிரானதே என்பதை மறந்துவிடக் கூடாது! அவர்களுக்கு “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே ஆட்சி அதுவும் அகண்ட பாரதம்” என்பதே திட்டம் – இன்று வரையான திட்டம் - என்பதையும் மறந்துவிடவே கூடாது! அதனால்தான் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்த அடுத்தநாளே செயல்படுத்தத் தயாரான “தேசிய கல்விக்கொள்கை -2019 வரைவு அறிக்கை” இந்திபேசாத மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயமாக்கும் எனும் பழைய கொள்கையைப் பிரகடனப் படுத்தியது என்பதையும் மறந்துவிடக் கூடாது.    “இந்தி மொழி இந்தியாவின் தேசியமொழி அல்ல” என்று குஜராத் நீதிமன்றம் ஜனவரி-25,-2010 அன்று ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அது இன்றும் தொடர்கிறது. என்றாலும் இந்தியை இந்தியாவின் தேசியமொழி என்றே இந்திய ஆட்சியாளர்கள் (காங்கிரஸ் ஆட்சியினரும், பாஜக ஆட்சியினரும்) முப்போதும் சொல்லி வருகிறார்கள், (இப்போதும் இதில் மாற்றமில்லை!) இந்த நேரத்தில் மாநில உரிமையாக, மொழி உரிமையாக, பண்பாட்டு உரிமையாக மட்டுமின்றி அந்தந்த தேசிய இன உரிமையாகவும் மொழிவழி மாநில உரிமைப் போராட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் “தேசிய இனங்களின் ஒன்றியம் இந்தியா” எனும் சரியான புரிதல் உருவாகும். அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டத்தின் ஆழ்ந்த புரிதல் இதுதான்! சரி இந்த நாளில் நம் கவனத்திற்குரிய இன்றைய பணிகளையும் பார்ப்போம்- தமிழகத்தின் நிலப்பகுதியை பாதுகாப்பதற்காக போராடிய தலைவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நாம் நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் எதற்காக போராடினார்களோ, அதை சாதிக்க நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

தாய்மொழி பேசிவரும் கடைசித் தலைமுறையாக நமக்கு அடுத்த தலைமுறை இருந்துவிடக் கூடாதெனில் இப்போதே, நாம் சில நல்ல முயற்சிகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டும். தமிழ் எனக்குத் தாய் என்றால், மலையாளம் என் சகாவுக்கு அம்மை! இந்திச் சகோதரனுக்கு இந்திமாதா! அவரவருக்கும் அவரவர் தாயும் மொழியும் உயர்வே! ஆனால் ஒவ்வாத எதையும் திணிக்கும் போது வாந்தி வருவது இயல்புதானே? மொழிவழி மாநிலம் பிரிந்த பிறகுதான், வளர்ச்சியில் ஒரு உத்வேகம் ஏற்பட்டது

இந்தியத் தலைநகராம் டெல்லியில் இந்தியாவின் பல்வேறு மொழியினரும் கலந்து வாழ்வது இயல்பு. ஆனால் கடந்த பல பத்தாண்டுகளாக அங்கு இந்தி தவிர்த்த மாநில மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கிழந்து வருவது இன்றைய இந்தியாவின் வரலாற்றுச் சோகம். பஞ்சாபி, அரியானி, பீகாரி, மகதி, மைதிலி, போஜ்புரி முதலான பல்வேறு மொழிகளும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த மாநிலத்தின் குழந்தைகள் அறியாத மொழிகளாகி வருகின்றன. இதில் டெல்லித் தமிழும் இல்லாமல் இல்லை! தில்லியில்தான் இப்படி என்றில்லை. அந்தந்த மாநில நிலையையும் டெல்லி நிலை போல மாற்றத்தான் அமித்ஷா துடிக்கிறார்! மோடி நின்று நகைக்கிறார்! இவர்கள் இருவருக்கும் குஜராத்தியே தாய்மொழி என்பது நினைவிருக்கட்டும்! குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மோ.க.காந்திக்குத் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் வாசித்து வழங்கப்பட்ட வரவேற்பின்போது, “என் தாய்மொழியிலோ உங்கள் தாய்மொழியிலோ இல்லாத இந்த வாழ்த்து யாருக்காக?” என்று கேட்டதும், அப்படியே இந்தியப் பிரதமர் மோடி ஐநாவில் இந்தியில் பேசியதும் இணைந்து நினைவுக்கு வருகிறதல்லவா! புத்தர் பேசிய பாலி மொழி இன்று வழக்கில் இல்லை! இயேசு பேசிய ஈபுரு மொழி இன்று வழக்கில் இல்லை! வேதங்கள் ஓதப்படும் சமஸ்கிருதம் என்றுமே வழக்கில் இல்லை!

தொல்காப்பியனின் “சங்கப் பலகையில் இருந்த தமிழ், இன்றும் “சன்னல்(விண்டோஸ்) பலகை” யில் கிடைக்கிறது! குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து நிலத்தில் கிடந்த எம் அன்னைத் தமிழ், இன்று ஆறாம் திணையான இணையத்திலும் இயங்குகிறது இதுதான் நம் தமிழின் உயர்வு! வெறும் பழம்பெருமையல்ல! தொடர்ச்சி! இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ்மொழியே முதலிடத்தில் உள்ளதாக 2017ஆம் ஆண்டின்  கூகுள்  கணக்கெடுப்பு கூறுகிறது! “இந்தி கற்பதில் தென்னிந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது” – என இந்திப்பிரச்சார சபா தலைவர் பெருமிதம்கொள்வது உண்மை. நாம் எந்த மொழிக்கும் எதிரிகளல்லர்! திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்!

அனைத்து மாநில மக்களின் வரிப்பணத்தில் தீட்டப்படும் திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது மாநில மொழிகளை ஏமாற்றுவது, அந்த மக்களை ஏமாற்றி ஆதிக்கம் செலுத்துவது அன்றி வேறென்ன? இது மாற்றப்பட வேண்டுமல்லவா? தமிழக மைல்கற்கள், பெயர்ப்பலகைகள் (மத்தியப் பல்கலைக் கழகம், திருவாரூர்) சத்தமில்லாமல் இந்தியாக மாற்றப்பட்ட “குறும்புகள்” நிறுத்தப்பட வேண்டும்.

தாய்மொழிவழிக் கல்விமட்டுமே அறிவை வளர்க்கும் என்பதை உணரவேண்டும் குழந்தைகளின் பெயர்களைத் தாய்மொழியில் வைத்தல், இணையத் தமிழ் வளர்ச்சியில் கவனமெடுத்தல், செல்பேசி, முகநூல் உள்ளிட்ட இணையத் தொடர்புகள் அனைத்தையும் தமிழில் வளர்த்தல், வங்கி,தொடர்வண்டி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட அனைத்து மத்திய நிறுவனங்களிலும் தாய்மொழிப் பயன்பாடு, என அரசியல் முடிவெடுக்க இந்த “மொழிவழி மாநில உதயநாள்” நமக்கு வழிகாட்டும் “தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தான்உயரும் அறிவு உயரும் அறமும் ஓங்கும், இமயமலை போல் உயர்ந்த ஒருநாடும் தன்மொழியில் தாழ்ந்தால் வீழும்” – பாரதிதாசன் (தமிழியக்கம்)

(கட்டுரையாளர் தமுஎகச மூத்த தலைவர்களில் ஒருவர், பணிநிறைவு பெற்ற அரசுப் பள்ளித் தமிழாசிரியர் muthunilavanpdk@gmail.com)