ஜூலை 7-ல் சத்துணவு ஊழியர்கள் மாநில தழுவிய போராட்டம்
சென்னை,ஜூலை 4- பள்ளிக்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கக்கூடிய வகையில் பள்ளி சத்துணவு மையங்கள் மூலம் உணவு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு;g பணிகளுக்கு 40 வயதுக்கு மேல் உள்ளவர்களை பணிபுரிய கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஜூலை 7 அன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள், பொதுச்செயலாளர் அ.நூர்ஜஹான் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 39 ஆண்டுகளாக சத்துணவு திட்டம் சிறப்பாக நடைபெறுகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் 14 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி சத்துணவு மையங்களில் பிப்ரவரி மாதம் வழங்கிய உணவுப் பொருட்கள் அனைத்தும் இருப்பில் உள்ளது. தமிழக அரசு மே மாதத்திற்குரிய அரிசி மற்றும் பருப்புகளை மாணவர்களுக்கு வழங்கிட அரசாணை வழங்கியுள்ளதை வரவேற்கிறோம்.
கொரோனா தொற்று கடுமையாக பரவி வருவதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, விலைவாசி பல மடங்கு ஏறிவுள்ள நிலையில் கிராமப்புறங்களில் ஏழைகள், விவசாயிகள் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பது கேள்விக்குறி ஆகிவிட்டது. பள்ளி சத்துணவு மையங்களில் சுகாதார முறையினை பின்பற்றி சூடான சத்துணவு தயாரித்து வழங்கினால் பசியை போக்குவதோடு தினமும் சத்துணவுடன் ஒரு முட்டை, இஞ்சி, பூண்டு மிளகு, கருப்பு கொண்டகடலை, பாசிபயறு சத்துணவுடன் வழங்கப்படுவதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கக்கூடிய புரோட்டீன் சத்தும், வைட்டமின் சத்தும் கிடைக்கும். இதனால் குழந்தைகளின் உடல் நலம் பேணப்படும்.
பல பேரிடர் காலங்களில் தமிழ அரசின் நிவாரண நடவடிக்கைகளில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கமும் பங்கேற்று நிவாரணங்களை வழங்கியுள்ளதோடு ஒரு நாள் ஊதியமும் பலமுறை வழங்கியுள்ளோம். கஜா புயல் காலத்தில் கடலோர மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் செய்துள்ளோம். தற்போது கொரோனா தொற்று ஏற்பட்ட இந்த காலத்தில் சமூக சமயலறைகளில் சமையல் செய்து ஏழைகள் ஆதரவற்றோர், தூய்மைகாவலர்களுக்கு வழங்கினோம். (62 நாட்களுக்குரிய உணவு தயாரிப்பு செலவினத்தொகையை திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்னும் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது) அதேபோல் கொரோனா தொற்று கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளோம். திருவாரூர் மாவட்டத்தில் சோதனைச்சாவடிகளிலும் மற்றும் அரசு வழங்கும் இதரப்பணியினை சத்துணவு ஊழியர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் முட்டைகள் 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருவதுபோல் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பள்ளி சத்துணவு மையங்களில் உணவு வழங்க வலியுறுத்தியும், கொரோனா பணிகளுக்கு 40 வயதுக்கு மேல் உள்ளவர்களை பணிபுரிய கட்டாயப்படுத்துவதை கைவிட வலியுறுத்தியும், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதினை 58-ல் இருந்து 59ஆக உயர்த்தியது போல், அமைப்பாளர்களுக்கு உள்ளது போல் ஓய்வு பெறும் வயதை குறைந்த ஊதியம் பெறும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கும் 60 வயதாக உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஜுலை 7 ஆம் தேதி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.