பாட்னா, ஜுன் 17- பீகார் மாநிலத்தில், மூளைக்காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் சில மாதங்களாக மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் மட்டும் 31 குழந்தைகள் உயிரி ழந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் பலி எண்ணிக்கை நூறைத் தொட்டது. இதனால் அம்மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு, முசாபர்பூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை யிலும் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஞாயிறன்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனும், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டேவும் பார்வையிட்டனர்.
துரித நடவடிக்கை எடுத்திட சிபிஎம் வலியுறுத்தல்
பீகார் மாநிலத்தில் சுமார் நூறு குழந்தைகள் மூளைப் பாதிப்பு நோயால் மரணம் அடைந்துள்ளநிலையில், நோய் பரவலைக் கட்டுப்படுத்திட மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுத்திடவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. பலியான குழந்தைகளுக்கு தனது துயரகரமான அஞ்சலியையும் செலுத்தியுள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. கட்சியின் பீகார் மாநில செயலாளர் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், இறந்த குழந்தைகளின் பாதுகாவலர்களைச் சந்தித்தனர். இத்துயரச் சம்பவங்கள் குறித்தும், குழந்தைகள் இறந்ததற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்தும் கேட்டறிந்தனர். இந்நோயைக் கட்டுப்படுத்திட மருத்துவர் குழு உட்பட தேவையான அனைத்து உதவிகளையும் நல்கிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.