tamilnadu

img

சமூக மாற்றத்திற்கான மாற்று ஊடகம்

இன்றைக்கு உலக நாடுகளில் மக்களில் பெரும்பாலனவர்கள் பயன்படுத்தக்கூடியது ஸ்மார்ட் போன். இந்த ஸ்மார்ட் போன்களில் உள்ள பேட்டரிகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் அதாவது கோபால்ட், நிக்கல், லித்தியம் ஆகிய பொருட்கள் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சுரங்கங்களில் கிடைக்கின்றன. இந்த பொருட்களை சேகரிக்க அந்த நாட்டு சிறுவர்களை ஆபத்தான சுரங்கங்களுக்குள் அனுப்புவார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அப்படி சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பேட்டரிகளைத் தான் நமது ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்துகிறோம். அந்த ஸ்மார்ட் போன்களில் வரும் காட்சிகளைக் கண்டு நாம் மகிழ்கிறோம். நமது மகிழ்ச்சிக்கு பின்னால் இருப்பது பல்லாயிரம் குழந்தை உழைப்பாளிகளின் உழைப்பும் பல குழந்தைகளின் மரணமும் என்பது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்? 

அந்த சிறுவர்களின் இளமைப்பருவம் களவாடப்பட்டு வேட்டையாடப்படுகிறது என்பது தான் உண்மை. இதை ஒரு குறும்பட இயக்குநர் பார்க்கிறார். அந்த நாட்டிற்கு போவது அவ்வளவு எளிதல்ல. உயிரைப் பணயம் வைத்து ஒரு சிறிய கேமராவுடன் அங்கு செல்கிறார். அந்த சிறுவர்களை படம் எடுத்து அதனை வெளி உலகத்திற்கு காண்பிக்கிறார். அந்த குறும்படம் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நோக்கியா போன்ற நிறுவனம். சிறுவர்களின் உழைப்பைச் சுரண்டுகிறார்கள் என்று சொல்லி அந்த நோக்கியா நிறுவனம் தயாரிக்கும் செல்போனை நாங்கள் வாங்க மாட்டோம் என்று சில நாடுகள் முடிவு செய்தன. இதனையடுத்து நோக்கியா நிறுவனமும் இனிமேல் நாங்கள் அந்த நாட்டில் இருந்து உலேகத்தை வாங்க மாட்டோம் என்று சொல்லியது. இதனையடுத்து அந்த சுரங்கங்கள் மூடப்பட்டன. கொத்தடிமைகளாக இருந்த அந்த சிறுவர்கள் மீட்கப்பட்டார்கள். 

குறும்படங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். ரஜினி, கமல, அஜீத், விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் நடித்த பெரும்படங்கள் என்ன செய்கின்றன? இந்த நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சனைகளையும் கதையின் நாயகர்கள் வந்து தீர்த்து வைப்பார்கள் என்ற ஒரு தவறான கருத்தை மக்கள் மூளையில் திணிக்கின்றன. ஆனால் வரலாற்றில் எந்த ஒரு தனிப்பட்ட நாயகனும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கவில்லை என்பது தான் உண்மை. திரைப்படத்தில் போன்று பொது வெளியில் அடிதடி, வீரசாகசங்கள் செய்து மாற்றங்கள் ஏற்படுத்தியதாக வரலாறு உலகில் எங்கும் இல்லை. இந்த இடத்தில் தான் நாம் திரைப்படத்திற்கு மாற்று ஊடகமாக குறும்படங்களை நாம் பார்க்க வேண்டும். 

குறும்படங்கள் சமூக மாற்றத்தை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். விழிப்புணர்வு மிக்கதாக இருக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற குறும்படங்களை யாரும் எடுக்கவில்லை. ஏனெனில் சினிமா என்பது விலை உயர்ந்தது. ஒரு கேமராவின் விலை ஒரு கோடி இருக்கும். 400 அடி பிலிம் ரூ.10 ஆயிரம். ஒரு சினிமா எடுப்பதற்கு 14 ஆயிரம் அடி வேண்டும் என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்று யோசித்து பாருங்கள். ஆனால் இன்றைக்கு டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது ஒரு விஞ்ஞானப் புரட்சியாகும். கலை மீது ஆர்வமுள்ள கலைஞர்கள், இளைஞர்கள் திரைப்படத்தின் பக்கம் இன்றைக்கு ஈர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் திரைப்படங்களை எளிமையான வடிவில் தயாரிக்கத் துவங்கியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் நாறுக்கும் மேற்பட்ட குறும்பட போட்டிகள் நடைபெற்று உள்ளன. சிறுவர்களுக்கான, மாணவர்களுக்கான குறும்பட போட்டிகள் நடைபெற்று உள்ளன. செல்போனிலேயே குறும்படங்கள் எடுத்து அதை போட்டிக்கு அனுப்ப முடியும். ஒரு நிமிடம் அதாவது வெறும் 60 வினாடிகளே ஓடக்கூடிய குறும்படங்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுகள் வழங்கக்கூடிய குறும்பட விழாக்களும் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. நமது கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள் அதில் பங்கேற்க வேண்டும். 

சென்ற ஆண்டு கேரளாவில் நடைபெற்ற திரைப்படவிழாவில் வெளியிடப்பட்ட ஒரு திரைப்படம், சர்வதேச அளவிலான போட்டிக்கு அனுப்பப்பட்டது. அதில் என்ன விசேஷம் என்றால் அந்த படம் முழுக்க முழுக்க ஐபோனிலேயே எடுக்கப்பட்டது. அந்த இயக்குநர் ஒரு 15 லட்ச ரூபாயில் முழு நீள திரைப்படம் எடுத்து அதனை தனது லேப்டாப்பில் எடிட் செய்து சர்வதேச திரைப்பட விழா போட்டிக்கு அனுப்பியுள்ளார் என்பது தான் முக்கியமானது. அதனால் ஒரு காலத்தில் சொன்னது போல என்னிடம் பணமில்லை, என்னிடம் வசதியில்லை என்று சொல்ல முடியாது. நீங்கள் முதலில் திரைப்படம் குறித்த புரிதலுடன் படம் எடுக்க வேண்டும். இன்றைக்கு யூடியூப்பில் கூட திரைப்படம் எடுப்பது என்று ஏராளமான விளக்கங்கள் இலவசமாக சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. கொஞ்சம் பொறுமையும் அதனை தொடர்ந்து செய்து பார்க்கக்கூடிய அவகாசமும் இருந்தால் நீங்கள் சாதிக்க முடியும்.

ஹைபர்லிங்க் சினிமா

‘இன்கிரிடிபிள் இந்தியா’ என்ற படத்தை இயக்கியவர் கல்லூரி மாணவர் மௌரி. 2000 ஆண்டுக்குப் பிறகு திரைத்துறையில் புதிய வகை படங்கள் வரத்துவங்கின. இவை ஹைபர் லிங்க் படங்கள் என்று அழைக்கப்பட்டன.  உலகமயமாக்கலுக்கு பிறகு இந்த உலகம் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு உள்ளது. மனித வாழ்க்கைக்கு சம்மந்தம் இல்லாத தொடர்புகள் கிடைத்துள்ளன. எங்கோ நடைபெறும் சம்பவம் எங்கோ பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் ஒரு முடிவு கடைக்கோடி இந்தியனை பாதிக்கிறது. ஈரான், இராக் போர் நடக்கும் போது பெட்ரோல் விலை உயர்ந்து நம்ம ஊரில் ரசம் வைக்கிற தக்காளிக்கு விலை கூடியது. இந்த பிரச்சனையின் மூலவேர் ஈரான், இராக் போரின் விளைவு தான் என்று நம்ம அம்மாவுக்கு தெரியாது. ஒரு காலத்தில் நமது சாவுக்கு காரணம் என்ன என்று தெரியும். ஆனால் இன்றைக்கு நாம் ஏன் சாகிறோம் என்பது கூட நமக்கு தெரியாது. இப்படித்தான் போபாலில் விசவாயு கசிவின் காரணமாக விடிந்த போது 3 ஆயிரம் பேர் பிணங்களாக இறந்து கிடந்தார்கள். லட்சக்கணக்கானவர்கள் அந்த விபத்தில் பாதிக்கப்பட்டார்கள். பிறக்கக்கூடிய குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றன. இன்று வரை அதற்கான நஷ்டஈடு கிடைக்கவில்லை. எங்கோ இருந்த வந்த யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க நிறுவனத்திற்கு அரசில் அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் அனுமதி அளிக்கிறார். பேக்டரி நடத்துகிறார்கள். தப்பு செய்கிறார்கள். அதன் காரணமாக பலர் இறந்து போகிறார்கள். இதைத் தான் ஹைபர்லிங்க் என்று சொல்வார்கள். முதன்முறையாக ஒரு சின்ன படத்திற்குள் அனைத்து விசயங்களையும் இணைக்க இந்த படம் முயற்சித்துள்ளது. இந்த படத்தில் 4 தற்கொலைகள், ஒரு கொலை நடைபெறுகிறது. இந்த 4 கொலைகளுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. ஆனால் இந்த கொலைகளுக்கு அவர்கள் காரணமல்ல. ஒரு தனிமனிதனின் வாழ்க்கைக்கும் அரசியலுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை பற்றி இந்த படத்தை இயக்குநர் சொல்ல வந்துள்ளார். அதற்காக இயக்குநரை பாராட்டுகிறேன். 

‘குற்றாலீசுவரன்’

இந்த படத்தை இயக்கியவர் நல்லாசிரியர் விருது பெற்ற முருகேசன். மற்ற நாடுகளில் உள்ள அரசுகள் குழந்தைகள் விசயத்தில் மிக மிகப் பாதுகாப்பாக கையாள்கிறார்கள். ஒரு காரில் அமர்ந்து கூட கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு செல்ல முடியாது. அந்த குழந்தைக்காக பெல்ட் போட்டு அமரவைத்து அழைத்துச் செல்ல வேண்டும். கனடாவில் ஒரு பெற்றோர் கையில் சாப்பாடு ஊட்டியதற்காக அரசு அந்த குழந்தையை பெற்றோர்களிடமிருந்து தூக்கிச் சென்றுவிட்டது போலீஸ். கையில் சாப்பாடு ஊட்டினால் குழந்தைக்கு கிருமிகள் பாதிப்பு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்படும் என்று அரசு சுகாதாரத்தில் கவனமாக உள்ளது. இந்தியாவில் இப்படித்தான் நாங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டுவோம் என்பதை அரசு ஏற்கவில்லை. உங்களுக்கு குழந்தையை வளர்க்கத் தெரியவில்லை என்று அரசு சொன்னது. ஒரு குழந்தையை அடிக்க முடியாது, பள்ளி ஆசிரியர் குழந்தையை திட்ட கூட முடியாது. நமது ஊரில் நீச்சல் தெரியாமல் குளங்களில் சர்வ சாதாரணமாக குழந்தைகள் சாகின்றன. இந்த படத்தில் என்ன குறை இருந்தாலும் இயக்குநர் எடுத்த நோக்கத்திற்காக இந்த பாடத்தை பாராட்ட வேண்டும். அந்த காலத்தில் கிராமங்களில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார்கள். இன்றைக்கு நகரங்களில் வாழும் குழந்தைக்கு ரூ.10 ஆயிரம் செலவு செய்தால் தான் நீச்சல் கற்க முடியும். நீச்சல் கலையை அரசு பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிற இந்த படம் ஒரு நல்ல படம். 

எனவே இன்றைக்கு குறும்படங்கள் எடுக்கிற இயக்குநர்கள் அந்த குறும்படத்தின் மூலம் திரைத்துறையில் கால்பதித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். எண்ணம் நல்லது தான். ஆனால் குறும்படங்கள் மூலம் இந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கருத்துக்களை நாம் சொல்லியாக வேண்டும். பெரும் படங்களை விட குறும்படங்கள் மிகவும் வலிமையானவை. எனவே ஒரு சமூக மாற்றத்திற்காக இளைஞர்கள் குறும்படங்களை இயக்க முன்வரவேண்டும். 

தொகுப்பு: இலமு, திண்டுக்கல்

திண்டுக்கல்லில் டிசம்பர் முதல் வாரம் நடைபெற்ற புத்தகத் திருவிழாவையொட்டி அங்கு வெளியிடப்பட்ட படங்கள் குறித்தும் குறும்படங்கள் என்றால் அவை எவ்வாறு எடுக்கப்பட வேண்டும் என்றும் விளக்கினார் மதுரை அமெரிக்கன் கல்லூரி