நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு சபாநாயகர் பாட்டிலில் பால் ஊட்டியது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி எம்பியான டமாட்டி கோஃபி மற்றும் அவரது கணவர் டிம் ஸ்மித் ஆகியோர் வாடகை தாய் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். கடந்த ஜூலை மாதம் பிறந்த அந்த குழந்தைக்கு ஸ்மித்- கோஃபி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
டமாட்டி கோஃபி தனது குழந்தையுடன் நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெற்ற போது அவரது குழந்தையை வாங்கிய சபாநாயகர் டிரெவோர் மலார்ட், குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் ஊட்டினார். பின்னர் தனது இருக்கையை அசைத்து குழந்தையை தட்டிக்கொடுத்து மலார்ட் கவனித்துக்கொண்டார். இந்த நெகிழ்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.