புதுதில்லி:
காஷ்மீரில் முதுபெரும் தலைவர் பரூக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டு விட்டார் என்பது உண்மையானால் அவர் ஏன் இன்னும் நாடாளுமன்றத்திற்கு வர இயலவில்லை என்று மக்களவையில் புதனன்று (மார்ச் 18) விடுதலைச் சிறுத்தை கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் அவர் இதுதொடர்பாக பேசியதாவது:ஒரு மாநிலத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாக கூறு போட்டு சிதைத்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. அரசியல் நேர்மைக்கும் எதிரானது. இந்த நிலையில் அரசின் இந்த நடவடிக்கையை ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளைச் சார்ந்த மக்கள் எந்த அளவுக்கு அதை ஏற்றிருக்கிறார்கள்? வரவேற்றி ருக்கிறார்கள்? என்பதைக் கண்டறிவதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்கிற போது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏன் அனுமதிக்கக் கூடாது என்று இந்தஅவையில் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.மேலும், பரூக் அப்துல்லா உள்ளிட்ட முன்னாள் முதலமைச்சர்களை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தது ஜனநாயகப்படுகொலை. அவர்களை விடுவித்த தாக நாம் அறியவருகிறோம். ஆனால்,உண்மையில் அவர்கள் விடுவிக்கப் பட்டிருந்தால் இந்நேரம் அவர் நாடாளு மன்றத்திற்கு வந்திருக்க முடியும். மூத்த உறுப்பினர், முதுபெரும் தலைவர் பரூக் அப்துல்லா அவர்கள் ஏன் இன்னும் நாடாளுமன்றத்திற்கு வர இயலவில்லை என்கிற கேள்வி எழுகிறது.எனவே, உடனடியாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை அரசு அமைக்க வேண்டும். அந்த பகுதிகளை சுற்றிப்பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும். உண்மையில் அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது? சட்டம் - ஒழுங்கு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? ஜனநாயகம் எந்த அளவுக்கு அங்கே உயிர்ப்போடு இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மூன்று யூனியன் பிரதேசங்களை மேம்படுத்துவதற்காக, அவற்றின் வளர்ச்சிக் காக இந்த அரசு கூடுதலாக நிதி ஒதுக்கியிருக்கிறது என்று இங்கே பலரும் பாராட்டிப்பேசினார்கள். ஆனால், சுயேட்சையாக, சுதந்திரமாக அந்த மாநில அரசு இயங்கிக்கொண்டிருந்த போக்கு தடுக்கப்பட்டி ருக்கிறது; உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. இந்திய அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மிகமோசமான வரலாற்றுக் கறை என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களையும் மீண்டும் மாநிலமாக ஒருங்கிணைக்க வேண்டும்; மாநில அந்தஸ்து வழங்கவேண்டும்.இவ்வாறு தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.