புதுதில்லி:
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், நவம்பர் 18 முதல் நடைபெற்றுவரும் நிலையில், பாஜக ஆட்சியானது, கடந்த 5 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பொருளாதார மந்த நிலையைப் போக்குவதற்கு, மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும்கேள்விகளை எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதாக நினைத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, நாட்டில் பொருளாதார மந்தநிலையெல்லாம் இல்லை, வளர்ச்சி விகிதத்தில் மட்டுமே குறைவு ஏற்பட்டுள்ளதுஎன்று புதிய விளக்கம் ஒன்றை அளித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் தங்கள் ஆட்சி மீது வீண்பழி சுமத்துவதாகவும் உரத்த குரலில் ஆவேசமாக பேசினார்.ஆனால், அமைச்சரின் இந்த ஆவேசஉரையை எதிர்க்கட்சிகள் தரப்பில் அனைவரும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்த வேளையில், நிர்மலாசீதாராமனுக்கு பின்னால் அமர்ந்திருந்த- பாஜகவைச் சேர்ந்த மத்திய திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே, நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் உள்ளிட்ட சக அமைச்சர்கள் குறட்டை விடாத குறையாக தூங்கி விழுந்தனர்.இந்த வீடியோ தற்போது ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இவ்வாறு தூங்கி வழியும் அமைச்சர்களை வைத்துக் கொண்டுதான் மோடி அரசுபொருளாதாரத்தை உயர்த்தப் போகிறதா? என்று மோடி, அமித்ஷாவின் டுவிட்டர் பக்கங்களில் பலரும் கேள்விக்கணை தொடுத்துள்ளனர்.