ஒரு பெண் ஆட்சி செய்தால் என்ன தவறு? என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் கே.எம்.ஷாஜிக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலாஜா அளித்த பதிலை டிக்டாக் செய்து சமூக ஊடக நட்சத்திரமாக ஜொலிக்கிறார் ஆறு வயது சிறுமி ஆவர்த்தனா.
பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்த சிறுமியை சிறந்த கலைஞராக வெளிப்படுத்தும் இந்த வீடியோ யூடியூப், முகநூல் போன்ற ஊடகங்களில் பெருமளவு பகிரப்பட்டு வைரலானது. சனியன்று அமைச்சர் சைலஜா கவனத்திற்கும் இது சென்றது. உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது திறமையை பாராட்டியதுடன் பாலக்காடு வரும்போது சந்திப்பதாகவும் ஆவர்த்தனாவிடம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பற்றி யெரிந்த காலகட்டம் அது. கேரள சட்டமன்றத்தி்ல் அதுகுறித்த விவாதம் நடந்தபோது பெண்களுக்கு எதிரான கருத்துகளை சட்டமன்ற உறுப்பினர் கே.எம்.ஷாஜி கூறினார். அவருக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.கே.சைலஜாவின் உரை , “பெண்ணாக இருந்தால் என்ன.. என்கிற அறச்சீற்றத்துடன் வெளிப்பட்டது.
அப்போது அந்த உரை சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த உரையை தனது மகள் ஆவர்த்தனா மூலம் டிக்டாக்கில் பதிவிட்டார் தந்தை சபரீஷ். அதற்காக தனது துப்பட்டாவை மகளுக்கு புடவையாக கட்டி சைலஜா டீச்சர் கெட்டப்புக்கு கொண்டு வந்தவர் தாயார் ஜிஷா. கோபத்துடன் பேச வேண்டும் என்று மட்டும்தான் அவளிடம் கூறினோம். ஆனால் அவள் தெறிக்க வி்ட்டாள் என்கிறார் சபரீஷ்.