புதுதில்லி, ஜூலை 17-
மத்திய அரசின் விவசாயி விரோத, விவசாய விரோதக் கொள்கைகளுக்கு எதிராக விவசாய சங்கங்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திடுவோம் என்று அகில இந்திய கிசான் கவுன்சில் அறைகூவல் விடுத்துள்ளது.
சமீபத்தில் ஹைதராபாத்தில் ஜூலை 12-14 தேதிகளில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின், அகில இந்திய கிசான் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாட்டிலுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய நிலைமைகளை குறித்து விவாதிக்கப் பட்டு, எதிர்கால நடவடிக் கைகள் குறித்து திட்டமிடப்பட்டது.
முன்னதாக, ‘விவசாய நெருக்கடி மற்றும் இதனைத் தீர்ப்பதற்கான மாற்றைக் கட்டி எழுப்புவதில் தொழிலாளி-விவசாயி சமூகக் கூட்டுறவுகளின் பங்கு’ என்னும் தலைப்பில் நாடு தழுவிய அளவில் பட்டறை ஒன்றும் நடைபெற்றது. இப்பட்டறையை கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் துவக்கி வைத்தார். பட்டறையில் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா சிறப்புரையாற்றினார். நாடு முழுதுமிருந்து 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டனர். வெற்றிகரமாக இயங்கக்கூடிய கூட்டுறவு அமைப்புகள் குறித்தும், தங்கள் பகுதிகளில் கூட்டுறவு நடவடிக்கைகளுக்கான இயக்கத்தைக் கட்டி எழுப்புவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
பின்னர் கிசான் கவுன்சில் கூட்டத்தில் நாட்டில் நிலவும் வறட்சி நிலைமைகள் குறித்தும் அதனைத் தீர்ப்பதில் மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் அக்கறையற்று இருப்பது குறித்தும் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு எவ்விதமான அக்கறையுமின்றி இருந்திடும் மத்திய அரசு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வறட்சி பாதித்த பகுதிகள், தேசியப் பேரிடர் நிதியத்திற்கு நிதி வழங்குவதிலிருந்து விலக்கு அளித்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளதால் இதனை தேசியப் பேரிடராக அறிவித்திட வேண்டும் என்று அகில இந்திய கிசான் கவுன்சில் கோரியது. மேலும், வறட்சியால் ஏற்பட்டுள்ள பயிரிழப்புக்கான இழப்பீடு, அத்தியாவாசியப் பொருள்கள் இலவசமாக வழங்குதல், கடன்கள் தள்ளுபடி செய்தல் மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் வேலைகள் வழங்குதல் உட்பட வலுவான நிவாரண நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும் கிசான் கவுன்சில் கோரியது.
கிசான் கவுன்சில் கூட்டத்தில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய உரிமத்தொகைகளை அளித்திடாமல் ஏமாற்றுவது தொடர்பாகவும், விவசாயிகளை ஏமாற்றி அதீத லாபத்தை அள்ளிச்செல்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
2019 பிப்ரவரி 13 உச்சநீதிமன்றத் தீர்ப்பின்ப்டி பல லட்சக்கணக்கான பழங்குடியினர் மற்றும் காலங்காலமாகக் காடுகளில் வாழ்ந்துவரும் பூர்வகுடியினர் தங்கள் வசிப்பிடங்களைக் காலி செய்ய வேண்டிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றனர். இதற்கெதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம், தன் தீர்ப்பினைத் திருத்திக் கொண்டு, தன் முந்தைய தீர்ப்புக்கு 2019 ஜூலை 10 வரையிலும் தடை விதித்திருந்தது. அடுத்து இது தொடர்பாக பல்வேறு மனுக்களின் மீதான விசாரணையை வரும் ஜூலை 24 அன்று நடத்துகிறது.
மத்திய பாஜக அரசாங்கமும், வனங்களை கார்ப்பரேட்டுகள் சூறையாடிச் செல்வதற்கு வசதி செய்துதரும் விதத்திரும் பழங்குடியின மக்களைச் சுரண்டும் விதத்திலும் இந்திய வனச் சட்டத்திற்கு மிகக் கொடுமையான சட்டத்திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
இது தொடர்பாக 2019 ஜூலை 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தில்லியில் நிலம் மற்றும் வன உரிமைகள் இயக்கங்களின் தேசியக் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வரும் ஜூலை 22 அன்று கிராம, ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவில் மத்திய அரசின் நவடிக்கைகளைக் கண்டித்தும் அவற்றிற்கு எதிராகவும் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளது. வன உரிமைகள் சட்டம் மற்றும் பழங்குடியினருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தாங்கள் தலையிட வேண்டுமென்று அனைத்து மாநில முதலமைச்சர்களும் மேற்கண்ட கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
2019 ஜூலை 22 அன்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினருடனும், ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பினருடனும் இணைந்து, நாடு தழுவிய அளவில் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் தில்லியிலும் கிளர்ச்சிப் போராட்டம் நடைபெறும்.
(ந.நி.)
ReplyReply allForward |