புதுதில்லி:
இந்திய நாடு ஒளிமயமான வரலாற்றை மட்டும் பெற்றிருக்கவில்லை, அது இந்த நாட்டை ஆட்சி செய்த சர்வாதிகாரிகள் அனைவரையும் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்த வரலாற்றையும் பெற்றிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம்.ஆரிப் ஆவேசத்துடன் பேசினார்.
மக்களவையில் செவ்வாய் அன்று ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டமுன்வடிவின்மீது ஏ.எம். ஆரிப் பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவது தொடர்பாகவும், அம்மாநிலத்திற்கு அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ஒழிக்கப்படுவது தொடர்பாகவும், நான் ஆழ்ந்த கவலையை அவையில் தெரிவிக்கிறேன் என்றால், ஆளும்கட்சித் தரப்பில் எவரேனும் என்னை பாகிஸ்தானி என்றோ அல்லது தேச விரோதி என்றோ விளித்திடலாம். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. என் கடைசி மூச்சு இருக்கும்வரைக்கும் நான் ஓர் இந்தியனாகத்தான் இருப்பேன். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர், இந்தச் சட்டமுன்வடிவை எதிர்ப்பவர்கள் மற்றும் இதனைத் தாக்கல் செய்திடும் நாள் ‘கறுப்பு தினம்’ என்று கூறுபவர்கள் பாகிஸ்தானிகள் அல்லது தேசத் துரோகிகள் என்று கூறியிருக்கிறார். அதனால்தான் நான் இதைக் கூறுகிறேன். ஆளும் கட்சிக்கு எதிராகப் பல்வேறு கருத்துக்களைக் கூறுகிறவர்களை யெல்லாம் பாகிஸ்தானிகள் என்றோ அல்லது தேசத் துரோகிகள் என்றோ தயவுசெய்து அழைக்காதீர்கள்.
‘காட்டாட்சி தர்பார்’
வரவிருக்கும் காலங்களில் எழுதப்பட இருக்கும் இந்திய வரலாற்றில், இந்தச் சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்த தினம் ‘கறுப்பு தினமாகக்’ கருதப்படும் என்று எவ்விதத்தயக்கமுமின்றி உரக்கக் கூறுகிறேன். நம் ஜனநாயகம் ‘காட்டாட்சித் தர்பார்’ (‘jungle raj’) ஆக மாற்றப்பட்டிருக்கிறது. எனவேதான் இந்தச் சட்டமுன்வடிவைக் கடுமையாக எதிர்க்கிறோம்.காஷ்மீர் மாநிலத்திற்கு அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பது கண்டு நான் ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ இல்லை. பாபர் மசூதியைஇடிப்பதற்குப் பின்னே இருந்த அதே சித்தாந்தம்தான் இப்போதும் செயல்பட்டி ருக்கிறது என்று நான் வலுவாகக் கருதுகிறேன்.
இது ஒன்றும் நிலத்தைப் பிரித்திடும் விஷயம் அல்ல. இது, மனங்களைப் பிரித்திடும் விஷயமாகும். அரசியல்ரீதியான இந்த ஆக்கிரமிப்பில் எண்ணற்ற விதிகள் மீறப்பட்டிருக்கின்றன. அவை நீதித்துறையின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்பதால் அதற்குள் நான் இப்போது செல்லவில்லை.
வரலாற்று உண்மைகளுடன் ஒத்துப் போகக்கூடிய மனப் பக்குவம் இந்த அரசாங்கத்திற்குக் கிடையாது என்பது எங்களுக்குத் தெரியும். காஷ்மீர் தொடர்பாக உண்மை நிலை என்ன? காஷ்மீர் என்பது சிக்கலான வரலாற்று ஒப்பந்தங்களின் காரணமாக விளைந்த ஒன்றாகும். இந்தியா, அதற்கு சிறப்பு அந்தஸ்து அளித்ததை சர்வதேச சமூகத்திற்கும் உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமை என்பது அதன் வேற்றுமைப் பண்புகளின் ஒற்றுமையில் அடங்கி இருக்கிறது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்தச் சட்டமுன்வடிவானது நாட்டின் ஒற்றுமை மீதும், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்கிற கருத்தாக்கத்தின்மீதும் நடத்தப்பட்டுள்ள மிகப்பெரும் தாக்குதலாகும். நாடு, அறிவிக்கப்படாத அவசர நிலையினூடே கடந்து கொண்டிருக்கிறது. ஒருவிதமான அச்சம் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. இங்கே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளை - அதாவது தேசியப் புலனாய்வு முகமைச் சட்டமுன்வடிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டமுன்வடிவு போன்றவற்றை, சற்றே உற்று நோக்குங்கள். இவை அனைத்தும் தற்செயலாக நடைபெறும் ஒன்று அல்ல என்பதை நிச்சயமாகக் காண முடியும்.இவை, நாட்டின் குடிமக்களிடையே ஒரு சிறு எதிர்ப்பு வந்தாலும் அதனை மிகவும் கொடூரமான முறையில் அடக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளேயாகும். நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் உங்கள் காவல்துறையினரும், உங்கள் ஏஜன்சிகளும் எவரை வேண்டுமானாலும் சிறையில் அடைத்திட முடியும். அவர்கள் அரசியல்வாதிகளையும்கூட வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். மாண்புமிகு உறுப்பினர் பரூக் அப்துல்லா மற்றும் எங்கள் கட்சித் தலைவர் யூசுப் தாரிகாமி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக் கிறார்கள்.
உங்கள் தலை மீதும் கத்தி
ஜனநாயக விரோதமான அரசின் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் சந்தோஷப்படுபவர் களுக்கும் ஒன்றைமட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதல் காஷ்மீரோடு மட்டும் முடிந்துவிட்டது என்று நம்பிடாதீர்கள். உங்கள் தலைக்குக் கீழும் தாக்குதல் ஏற்படுத்திய அந்தக் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்து அளித்திருந்ததுபோல வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றிற்கும் அரசமைப்புச் சட்டத்தின் 371ஆவது பிரிவின்கீழ் சிறப்பு அந்தஸ்துகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. உள்துறை அமைச்சர் அவர்களே, நாடாளுமன்றத்தில் உங்களுக்கிருக்கிற முரட்டுத்தனமான பெரும்பான்மை நீங்கள் விரும்பும் எதையும் செய்வதற்கு உங்களுக்கு உரிமம் அளித்திட வில்லை. இந்த நாடு ஒளிமயமான வரலாற்றை மட்டும் பெற்றிருக்கவில்லை, அது இந்த நாட்டை ஆட்சி செய்த சர்வாதிகாரிகள் அனைவரையும் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்த வரலாற்றையும் பெற்றிருக்கிறது. எனவே, நான் இந்தச் சட்டமுன்வடிவைக் கடுமையாக எதிர்க்கிறேன்.இவ்வாறு ஏ.எம். ஆரிப் கூறினார்.(ந.நி.)