புதுதில்லி:
“திப்பு சுல்தான் ஒரு சுதந்திர போராட்ட வீரர் அல்ல, எனவே, அவர் பாடப்புத்தகங்களில் இடம் பெறுவதற்குத் தகுதியற்றவர்” என்று கர்நாடக பாஜக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்வதுடன், அவரைப் பற்றிய அனைத்தையுமே பாடப் புத்தகங்களில் இருந்து அகற்றுவது பற்றியும் தாங்கள் யோசித்து வருவதாக எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு, திப்பு சுல்தான் பிறந்த நாளை ‘திப்பு ஜெயந்தி’ என்ற பெயரில் அரசு விழாவாக அறிவித்ததுடன், பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதிப்பு சுல்தான் தொடர்பான வரலாற்றையும் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ந்திருந்தது. தற்போது கர்நாடகத்தில் ஆட்சி மாறிய நிலையில், திப்பு சுல்தானைப் பற்றிய பாடங்களை நீக்க வேண்டும் என்று, மடிகேரியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. அப்பாச்சு ரஞ்சன் பிரச்சனையைக் கிளப்பினார். ரஞ்சனின் கிளப்பிய விவகாரம் மீது அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கர்நாடக மாநில கல்வி அமைச்சரான சுரேஷ்குமாரும், கர்நாடக பாடநூல் கழக இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதன் பின்னணியிலேயே, முதல்வர் எடியூரப்பா மேற்கண்டவாறு செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார்.