புதுதில்லி:
இந்தியாவில் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியதிகாரி மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார்.
சொல்லப்போனால், இந்தியாவில் வேலையின்மை பிரச்சனையை விட வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காததே மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலையின்மைப் பிரச்சனை குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு, மோகன்தாஸ் பாய் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:
“இந்தியாவில் சிறந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவது இல்லை. ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரையில் ஊதியம் கொண்ட வேலைவாய்ப்புகள்தான் அதிகமாக உருவாக்கப்படுகின்றன. பட்டம் பெறும் இளைஞர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகள் போதுமானதாக இருக்காது.வேலை உருவாக்கத்தில் சீனாவைநாம் பின்பற்ற வேண்டும். அங்கு தொழிலாளர் சார்ந்த துறைகளில் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. அந்நாட்டின் தொழிலாளர் சக்தியை உலக நாடுகள்பயன்படுத்திக்கொள்ளவும், ஏற்றுமதித் துறையை மேம்படுத்தவும் அந் நாடு முதலில் பாடுபட்டது. இந்தியாவில் நாம் தொழிலாளர் சக்தி அதிகமுள்ள துறைகளை ஊக்கப்படுத்துவதில்லை. இங்கு அதிகமுள்ள தொழிலாளர்களை முறையாகப் பயன்படுத்துவதற்கான சரியான கொள்கைகளும் நம்மிடம் இல்லை. சீனாவில் ஹைடெக் ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுத் துறையில் அதிகமாக முதலீடு செய்யப்படுவதைப் போல இந்தியாவில் முதலீடு செய்யப்படுவதில்லை.
அங்கு கடற்கரைப் பகுதிகளில், உள்கட்டுமான வசதிகளை சீனா அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. இதனால் வர்த்தகம் எளிதாகிறது. இந்தியாவில் அப்படி இல்லை. இந்தியாவில் வேலையின்மை பிரச்சனை அதிகமாக இருக்கிறது. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டில் மட்டும் 1.1 கோடிவேலைவாய்ப்புகள் காணாமல் போயுள்ளன. 15 முதல் 29 வயது வரையுள்ளவர்களின் வேலையின்மை தொடர்பான ஆய்வுகளில் பிழை உள்ளன.இவ்வாறு மோகன்தாஸ் பாய் கூறியுள்ளார்.