1938ஆம் ஆண்டு முதல் 1942 வரை நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள் மிகப்பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்குக் காரணமாக ஒரு அரசியல் சம்பவம் அமைந்துவிட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு, விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள காலனி நாட்டு மக்களுக்கு ஒருமைப்பாடு என மாணவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திய காலமது. ஸ்பெயின் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெகுமக்கள் முன்னணி (Popular Front)யின் அரசுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தளபதி பிராங்கோ செய்த சதியால் உள்நாட்டுப் போர் மூண்டது. அதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் உலகின் பல நாடுகளிலும் இருந்து சென்ற கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பங்கேற்றார்கள். இதையடுத்து உலகம் முழுவதுமிருந்து முற்போக்காளர்கள் நிதி வசூல் செய்து வெகுமக்கள் முன்னணிக்கு அனுப்பி வைத்தனர்.\
அதன் ஒரு பகுதியாக அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பால தண்டாயுதம்(பாலன்) உள்ளிட்ட மாணவர்கள் முன்னின்று நிதி வசூல் செய்தனர். அதை வைத்திருந்த ஒரு மாணவர் கையாடல் செய்துவிட்டார். இதில், அவரை கண்டித்ததால் பாலதண்டாயுதம் மீது துணைவேந்தர் சீனிவாச சாஸ்திரியாரிடம் அந்த மாணவர் புகார் செய்துவிட்டார். அதனால் விசாரணைக்குள்ளான பாலன் வெளியில் வந்ததும் எதிர்ப்பட்ட அந்த மாணவரை கோபத்தால் அடித்துவிட்டார். இதைக் காரணமாக வைத்து பாலனை பல்கலை.யிலிருந்தே நீக்கிவிட்டார். அத்துடன் கே.சுப்ரமணியம், கே.கணேசன், ஆர்.சாம்பசிவம், எம்.ஏ.அய்யாசாமி, என்.எம்.விவேகானந்தம் ஆகியோரை தற்காலிகமாக நீக்கம் செய்துவிட்டார். இதனால் மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை பாலனை கைது செய்தது. இதைக் கண்டித்து காவல்நிலையம் வரை 600 மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பியபடியே சென்றனர். அடுத்த நாள் பாலன் ஜாமீனில் வெளிவந்தார். ஆனால் துணைவேந்தர், பல்கலைக்கு ஒன்றரை மாதம் விடுமுறை அறிவித்துவிட்டார். அத்துடன் பல்கலை. வளாகத்தை காவல்துறையிடம் ஒப்படைத்தும்விட்டார். அதுமட்டுமின்றி தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றையும் துண்டித்துவிட்டனர்.
ஆயினும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாலன் மற்றும் ஐவர் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் துணைவேந்தர் தற்காலிக நீக்கம் செய்துவிட்டார். இந்த நடவடிக்கை இன்றைய பாஜக ஆட்சியில் சில துணைவேந்தர்களின் நடவடிக்கையை ஒத்ததாக அமைந்திருக்கிறதல்லவா? என்றாலும் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். திருச்சி மற்றும் தென்னார்க்காடு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். இந்நிலையில் வேறு வழியின்றி மற்ற மாணவர்கள் மீதான தற்காலிக நீக்கத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார் துணைவேந்தர். ஆனாலும் பாலதண்டாயுதத்தை மீண்டும் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார். ஆயினும் தான் ஒருவருக்காக மற்றவர்களது படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதால் பாலதண்டாயுதம் வேறுவழியின்றி துணைவேந்தரின் நடவடிக்கை ஏற்றுக் கொண்டார். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் வெற்றிபெறவில்லை எனினும் தமிழகத்தின் இதர பகுதி மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் மாணவர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கருத்துக்கள் பரவலாக அறிமுகமாவதற்கு வாய்ப்பாக அமைந்தது.
சென்னை, திருச்சி நகரங்களில் மட்டுமின்றி மதுரையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அண்ணாமலை பல்கலைக்கழகப் போராட்டம். இதனால் ஏற்கெனவே தமிழகத்தின் அரசியல் மையமாக விளங்கிய மதுரை மாநகரில் சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கு கல்லூரி மாணவர்களை ஈர்ப்பதற்கான சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது. இதையடுத்து அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற பூவண்ணன், என்.சங்கரய்யா, சிவகங்கை ராமச்சந்திரன், ராஜலிங்கம், ரங்கசாமி, நாராயணசாமி ஆகியோர் மாணவர் இயக்கத்தை கட்டுவதற்கு தீவிரமாக செயல்பட்டனர். சிறந்த பேச்சாளராக விளங்கிய சங்கரய்யா அமெரிக்கன் கல்லூரி மாணவர் சங்கம், பரிமேலழகர் தமிழ்க்கழகம் போன்றவற்றின் இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முன்முயற்சியால் கல்லூரி வளாகத்தில் மாணவர்களை அணிதிரட்டுவது நடைபெற்றது. அதற்காக மாணவர் சங்கத் தலைவராக விளங்கிய மோகன் குமாரமங்கலம், மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். விக்டோரியா எட்வர்டு அரங்கில் நடைபெற்ற மாநாட்டில் மோகன் குமாரமங்கலமும் சங்கரய்யாவும் உரையாற்றினர். அந்த மாநாட்டிலேயே மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தில் மாணவர் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்புகளை பராமரித்து வந்தது. அதனால் காங்கிரஸ் தலைவர் காமராஜர், காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர் முத்துராமலிங்கத் தேவர், சசிவர்ண தேவர் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் அடிக்கடி மதுரை வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைக்கப்பட்டனர். தமிழகத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை பலப்படுத்திக் கொண்டே மாணவர்களை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு கொண்டுவந்த ஏ.கே.கோபாலன், சுப்பிரமணிய சர்மா, கே.முத்தையா போன்றவர்கள் மதுரைக்கு அடிக்கடி வந்தார்கள். இதையடுத்து மதுரையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவராக விளங்கிய ஏ.செல்லையா, எஸ்.ராமநாதன், கே.பி.ஜானகி, எஸ்.குருசாமி போன்றவர்களுடைய தொடர்பும் மாணவர் சங்கத்திற்கு ஏற்பட்டது. அதன் மூலம் மாணவர் இயக்கம் மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கும் பரவலானது. திண்டுக்கல், உத்தமபாளையம் போன்ற நகரங்களிலும் மாணவர் சங்கத்தை துவக்குவதற்கு சங்கரய்யா பெரும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக உத்தமபாளையம் மாணவர் சங்கம் உருவானது. அதில் ஜமால் மொய்தீன், குலாம் மொய்தீன், உசேன் மீர், ஏ.அப்துல் வகாப், எஸ்.பி.முகமது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் கே.டி. அரசு, சி.பி.ராஜன் உள்ளிட்டோரைக் கொண்ட திண்டுக்கல் மாணவர் சம்மேளனம் துவக்கப்பட்டது.