புதுதில்லி:
கடந்த 2014-ஆம் ஆண்டு மோடி அரசு பதவியேற்றதும், கங்கையை தூய்மைப்படுத்தப் போகிறோம் என்று ‘நமாமி கங்கா’ என்ற திட்டத்தைத் துவங்கியது. இத்திட்டத்திற்கு, ரூ. 20 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடும் செய்தது.
கடந்த 1985-ஆம் ஆண்டும், இதேபோல ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கங்கை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தது; ஆனால், இலக்கு எட்டப்படவில்லை; தங்கள் அரசில் அதுபோல நடக்காது; நிச்சயமாக கங்கை தூய்மையாகும் என்றும் மோடி அரசு சத்தியம் செய்தது.‘நமாமி கங்கா’ திட்டத்தின் கீழ், கங்கையில் கழிவுகள் நேரடியாக கலப்பது கண்காணிக்கப்படும், கழிவுநீரைச் சுத்திகரித்த பின்னரே, அது கங்கையில் கலப்பதற்கு அனுமதிக்கப்படும்; சமூக மற்றும் பொருளாதார நலன்களைச் சார்ந்தே இத்திட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்; கங்கைகயை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றெல்லாம் பக்கம் பக்கமாக அறிக்கையில் கூறியிருந்தது.
இந்நிலையில், புனிதநீர் என்று கூறப்படும் கங்கை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு மாசுபட்டிருப்பதாக, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கங்கை நீரை குடிப்பது மட்டுமல்ல, அதில் குளிக்கக் கூட முடியாது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை தற்போது அளித்துள்ளது.
“கங்கை ஆறு பாயும் வழியில் 86 இடங்களில் கண்காணிப்பு மையம் அமைத்திருந்தோம். அந்த இடங்களில் உள்ள நீரைப் பரிசோதனை செய்ததில் 78 இடங்களில் உள்ள நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சுகாதார சீர்கேடு காரணமாக, வீரியம் மிகுந்த கோலிபார்ம் பாக்டீரியா (Coliform bacteria) உள்ளது.
அதனால் கங்கை ஆற்றின் நீரை குடிக்க, குளிக்க பயன்படுத்த முடியாது. 86 இடங்களில் வெறும் 18 இடங்களில்தான் குளிப்பதற்கான சூழலே உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கங்கையைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று கூறி, மோடி ஆட்சியில் ஒதுக்கப்பட்ட ரூ. 20 ஆயிரம் கோடியும் தற்போது ஸ்வாஹா ஆகியிருப்பது தெரியவந்துள்ளது.