புதுதில்லி:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதி மசோதாவில், அரசியலமைப்புச் சட்ட விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது என்றுகாங்கிரஸ் மூத்தத் தலைவரும், மத்தியமுன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டாக வேண்டும் என் றும் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதி மசோதா குறித்து, ப. சிதம்பரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் ‘எவரும் இல்லாத நேரத்தில்’, கடந்த ஜூலை 23-ஆம் தேதி தனது முதல்நிதி மசோதாவை, மத்திய நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இதற்கு ‘தனி தைரியம்’ வேண்டும். இதற்காக நிதியமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
2019-20 நிதிநிலை அறிக்கை குறித்து,பல கேள்விகள் இருப்பதைப் போலவே,இந்த நிதி மசோதா குறித்தும் நிறைய கேள்விகள் உள்ளன.முதலாவதாக, தற்போது தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா, அரசியலமைப்புச் சட்ட விதி எண்: 110-இன்படிமட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும்.இதனை உச்ச நீதிமன்ற நீதிபதி புட்டாசாமி ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, வரிகள் குறித்த விவகாரங்கள் மற்றும் இந்திய கூட்டுநிதி அல்லது இந்திய பொதுநிதி குறித்த ஒதுக்கீட்டு விவகாரங்கள் மட்டுமே நிதி மசோதாவில் இடம்பெற வேண்டும். ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி மசோதாவில் எண்: 110-இன் படி, அனுமதிக்கப்படாத பல இனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தஇனங்கள் ‘இதர செலவுகள்’ என குறிப்பிடப்பட்டு, அதன்மூலமாக ரிசர்வ் வங்கிவிதிகள் உட்பட பல்வேறு விதிகள் மீறப் பட்டுள்ளன. எனக்குத் தெரிந்தவரை 10 விதிகள் மீறப்பட்டுள்ளன. இந்த விதிகள் அனைத்தும் விதி எண்: 110-இன் கீழ்வராதவை ஆகும்.
இந்த மசோதா, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என யாரும் வாதிடமுடியும். இவ்வளவு முக்கியமான மசோதாவின் மீது அரசு எவ்வாறு ஒரு முன்னெச்சரிக்கையின்றி நடந்து கொண்டுள்ளது என்று ஆச்சரியமாக இருக்கிறது. அடுத்தது, அரசு அளித்துள்ள வருமானத்திற்கான இலக்கு ஆகும். இது ஒருவரும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளது. கடந்த 2018-19ஆம்ஆண்டுக்கான உண்மையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொள்ளாமல், 2019-20 வரையிலான எதிர்பார்க்கும் வளர்ச்சி அடிப்படையில் உள்ளது. இவ்வாறான அதிக அளவில் வருமான இலக்கை அரசு எப்படி முன்கூட்டியே அறிவிக்க முடியும்?ஐஎம்எப், ரிசர்வ் வங்கி உள்ளிட்டவைகள், இந்தியாவின் மொத்த உற்பத்திவளர்ச்சி 7 சதவிகிதம் என்று மட்டுமேஅறிவித்துள்ளன. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதை ஒவ் வொரு பொருளாதார வல்லுநரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதைக் கடந்த நான்கு காலாண்டுகளின் புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன. அப்படியிருக்க, அரசு எவ்வாறு இந்த வளர்ச்சி விகிதங்களை இரட்டிப்பாகக் காட்டுகிறது?
மூன்றாவது, மாநில அரசுகளுக்கு, அவர்களுடைய வரிப் பங்கு சரியாக அளிக்கப்படுகிறதா? என்று சந்தேகம் உள்ளது. 14-ஆவது நிதி ஆணையம், மத்திய அரசின் மொத்த வரி வருமானத்தில் 42 சதவிகிதத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த பங்கு என்பது, மாநிலங்களுக்கான சட்டப்பூர்வமான பங்கு ஆகும். ஆனால், இந்த பங்கைத் தவிர, மத்திய அரசு மாநிலங்களுக்கு வேறு ஏதாவது அளித்துள்ளதா, அல்லது இந்த பங்கையாவது முழுமையாக அளித்துள்ளதா? என்பது இன்னும் தெரியவில்லை.இதற்கு முக்கியக் காரணம், மொத்த வரி என்பது கல்விக்கான கூடுதல்வரி உள்ளிட்ட ஏராளமான கூடுதல் வரிகளைக் கொண்டதாகும். அதில் இருந்தும் மாநிலங்களுக்கு 42 சதவிகிதத்தைஅளிக்க வேண்டும். ஆனால், இந்த அரசு கூடுதல் வரிகளை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. இதுஒருபுறம் என்றால், சென்ற 2018-19 நிதியாண்டில் எதிர்பார்க்கப்பட்ட வரி வசூல் தொகை ரூ. 22 லட்சத்து 70 ஆயிரம் கோடி, ஆனால், வசூலானது ரூ. 22 லட்சத்து 48 ஆயிரம் கோடி.இவ்வாறு வரி வருவாய் குறையும் போது, மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கும் குறைந்து விடுகிறது.நான் ஏற்கெனவே எழுப்பிய கேள்விகள் எதற்கும் நிதியமைச்சர் பதிலளிக்கவில்லை. இப்போது நிதி மசோதா குறித்து எழுப்பியுள்ள கேள்விகள் குறித்தாவது நிதியமைச்சர் மாநிலங்களவையில் விவாதம் நடத்த வேண்டும். அவ்வாறு செய்வதற்கு அவர் தயாரா?இவ்வாறு ப. சிதம்பரம் தனது அறிக்கையில் கேட்டுள்ளார்.