tamilnadu

img

மக்களை திரட்டுவதே முதல் நோக்கம் - ப.முருகன்

பயங்கரவாதத்திலிருந்து பாட்டாளி வர்க்க இயக்கம் நோக்கி...

நாட்டு   விடுதலைக்காக போராடிய தலைவர்கள் பலரும் முதலில் காங்கிரஸ்காரராகவும் பிறகு சோசலிஸ்ட்டுகளாகவும் பின்னர் கம்யூனிஸ்ட்டுகளாகவும் ஆனார்கள். அவர்களில் பயங்கரவாத புரட்சியாளர்களாக இருந்தவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களில் ஒருவர் நீலகண்ட பிரம்மச்சாரி.  இவர் நெல்லை மாவட்டம் எருகூரைச் சேர்ந்தவர். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த போராட்டம் ஆயுதந்தாங்கிய போராட்டமாக இருக்க வேண்டும் என்ற கருத்துடையவர். அதற்காக 1910 ஏப்ரல் 10 அன்று பாரதமாதா சங்கம் என்ற அமைப்பு இவரால் உருவாக்கப்பட்டது.

20வயதே நிரம்பிய நீலகண்ட பிரம்மச்சாரி முதலில் சென்னை நகர கூட்டுறவு கழகத்தில் எழுத்தாளராக பணியாற்றினார். நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டதால் அந்தப் பணியைவிட்டு விலகினார். மகாகவி பாரதியார் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் சேர்ந்து பணியாற்றினார். அந்தப் பத்திரிகையை ஆங்கிலேய அரசாங்கம் தடைசெய்தது.  அதனால் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவையில் இந்தியா பத்திரிகை செயல்படத் துவங்கியது. அங்கு பாரதியார் சென்றதையடுத்து நீலகண்ட பிரம்மச்சாரியும் சென்றார். பின்னர் அங்கிருந்து வெளியான ‘சூர்யோதயம்’ என்ற பத்திரிகையில் ஆசிரியராக செயல்பட்டார். அதில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதி வந்தார். அத்துடன் சுற்றியுள்ள பல ஊர்களுக்கும் சென்று சுதந்திர உணர்வை ஊட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இவர் தன்னுடைய பெயரை பாரத்வாஜன், கோவிந்த நாராயண தூபே, சுவாமி பிரம்மச்சாரி என்றும் மாற்றிக் கொண்டு செயல்பட்டு வந்தார். அந்தப் பெயருடன் சொந்த ஊரான நெல்லை மாவட்டத்திற்கு சென்று தேசபக்த பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அப்போது கிராமபோன் பெட்டி மூலம் அந்தப் பகுதியில் பாடல்களை ஒலிபரப்பி வந்த ராமசாமி அய்யரிடமிருந்து நீலகண்ட பிரம்மச்சாரி அந்தப் பெட்டியை விலைக்கு வாங்கினார். அதை தன்னுடைய பிரச்சாரத்தின்போது பயன்படுத்தலானார். இதனால் அவரது பிரச்சாரத்திற்கு மக்கள் அதிகம் கூடலாயினர். அந்தப் பிரச்சாரத்தின்போது பிரிட்டிஷ் ஆட்சியின் போலீசார் வந்தால் உடனே அவரது பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு கிராமபோன் பெட்டியில் பாடல்களை ஒலிக்கச் செய்வார். இவ்வகையில் அவர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த பிரச்சாரம் அந்தக் காலத்திலேயே வெகுஜன மக்களை சென்றடைவதற்காக நவீன யுக்தியை கடைப்பிடித்தார்.

ஏனெனில் நீலகண்ட பிரம்மச்சாரியின் பயங்கரவாத புரட்சிகர கொள்கை என்பது இரண்டு வழிமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தது. ஒன்று சாதாரண மக்களிடையே நாட்டு விடுதலைக்காக பிரச்சாரம் செய்வது. மற்றொன்று நாடு முழுவதும் சுதந்திர ஆர்வம் கொண்ட மக்களிடையே மனஉறுதிமிக்க துணிச்சலானவர்களை தேர்வு செய்து நாட்டு விடுதலைக்காக தீவிர செயல்களில் ஈடுபடச் செய்வதுடன் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராவது என்பதாகும்.  அத்தகையவர்கள் பாரதமாதா சங்கத்தில் உறுப்பினராவதும், அவர்கள் கட்டைவிரலில் கத்தியால் கீறி ரத்தம் வரச் செய்து காளி சிலை முன்பு நாட்டு விடுதலைக்காக உறுதியேற்பதும் அவரது வழிமுறையாக இருந்தது. இதன்படி அந்த சங்கத்தில் சேர்ந்தவர்களில் ஒருவர்தான் செங்கோட்டை வாஞ்சிநாதன்.

நீலகண்ட பிரம்மச்சாரியின் இந்த நடைமுறை வ.வே.சு. அய்யரின் நடைமுறைகளிலிருந்து வேறுபட்டிருந்தது. வெளிநாட்டிலிருந்து ஆயுதங்கள் வாங்குவது மற்றும் தயாரிப்பது, தனிநபர்களை கொலைசெய்வது, சாத்தியமான இடங்களில் கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றுவது, தக்க வாய்ப்பு வரும் போது எழுச்சி செய்வது என்பது அவரது வழிமுறையாக இருந்தது. ஆனால் நீலகண்ட பிரம்மச்சாரி இந்த நடைமுறையுடன் வேறுபாடு கொண்டிருந்தார். அதற்கு காரணம் அவர் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகள் தேவை என்பதை முக்கியமானதாகக் கருதியதே ஆகும். அதனால் நெல்லை மாவட்டத்தை தனது தளமாகக் கொண்டு பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டார். அதற்கென சில திட்டங்களையும் கொண்டிருந்தார். பத்தமடை, பூலம், மரவக்குறிச்சி, தென்காசி, அம்பாசமுத்திரம், தூத்துக்குடி மற்றும் இதர ஊர்களிலிருந்து தீவிரமான ஆட்களைத் திரட்டி ஒரு புரட்சிகர ராணுவத்தை உருவாக்குவது அவரது முக்கியத்திட்டங்களில் ஒன்று. அந்த ராணுவம் 25 ஆயிரம் பேர் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது அவரது இலக்கு.

அந்த ராணுவத்தின் மூலம் பிரிட்டிஷாரை விரட்டியடிக்க வேண்டுமென்பதால் அவர் அதற்காக அமைதியாகவும் ரகசியமாகவும் ஆட்களை திரட்டி வந்தார். அதற்காக பூலம் பெரியசாமித் தேவர், மரவக்குறிச்சி பிச்சாண்டித் தேவர், அம்பாசமுத்திரம் கோமதி சங்கர தீட்சிதர், தூத்துக்குடி நிலையநத்தம் ரெட்டியார், ஆதனூர் மாப்பிள்ளைசாமி போன்ற பலருடன் தொடர்பு கொண்டிருந்தார்.  இவ்வாறு சுதந்திரப் போராட்ட இயக்கத்தை வெகுஜன இயக்கமாக மாற்றுவதில் காந்திக்கு முன்னோடியாக விளங்கினார் நீலகண்ட பிரம்மச்சாரி. காங்கிரஸ் மேல்ஜாதி இந்துக்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அதனால் தாழ்ந்த ஜாதிக்காரர்களின் ஆதரவையும் பெற முயற்சித்து தேசிய இயக்கத்தை வெகுஜன அடித்தளம் கொண்டதாக்க விரும்பினார்.

... நாளை முடியும்