tamilnadu

img

கார்ப்பரேட் வரிச் சலுகையால் நாடு பாதிப்பு... இலக்கு 13.35 லட்சம் கோடி.. வசூலோ 6 லட்சம் கோடிதான்!

புதுதில்லி:
ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது, அந்த நிதியாண்டில் எவ்வளவு ரூபாய் நேரடி வரிகள் மூலமாக வர வேண்டும், மறைமுக வரிகள் மூலமாக அரசுக்கு எவ்வளவு வருவாய் வர வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படும்.அதன்படி 2019 - 20 நிதியாண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை), நேரடிவரிகளான கார்ப்பரேட் வரி மற்றும் வருமான வரிகள் வழியாக 13 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், 2019 - 20 நிதியாண்டின் 7 மாதங்களை கடந்துவிட்ட நிலையில்,  நேரடி வரி மூலமாக எதிர்பார்க்கப்பட்ட 13 லட்சத்து35 ஆயிரம் கோடி ரூபாயில் 50சதவிகித தொகைகூட வசூல் ஆகாதது, மத்திய ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.2019 - 20 நிதியாண்டின் 7 மாதங்களில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் காலத்தில் நேரடி வரி வருவாய் வெறும்5 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி 17 சதவிகிதமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT - Central Board of Direct Taxes)தலைவர் பி.சி. மோடி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், 2019 - 20 நிதியாண்டிற்கு, அரசு நிர்ணயித்து இருக்கும் வரி இலக்கை அடைய எல்லா விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். நிச்சயம் இலக்கை அடைந்து விடுவோம் என்று கூறியுள்ளார்.கார்ப்பரேட் வரிக்குறைப்பு என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம்சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயை, பெருமுதலாளிகளுக்கு மோடி அரசு அள்ளிக் கொடுத்தது. இதுதான் நேரடி வரி வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.ஆனால், மோடி அரசு அதனை மறைத்து விட்டும், புதிய வரி வருவாய்க்கான வாய்ப்புகள் என்ன? என்பதை தெரிவிக்காமலும் இலக்கை எட்டி விடுவோம் என்று மட்டும் கூறுவது, வெற்றுச் சமாளிப்புஎன்று விமர்சனங்கள் எழுந்துள் ளன.இதனிடையே, இலக்கை எட்டிப் பிடிப்பதற்குப் பதிலாக, வரி வருவாய் இலக்கில் சுமார் 1 லட்சம்கோடி ரூபாயை குறைத்துக்கொள்ளும் குறுக்கு வழியை மோடி அரசு ஆலோசித்து வருகிறது. ஏற்கெனவே, ஜிஎஸ்டி வரி வருவாய் இலக்கு 15 சதவிகிதத்தில் இருந்து, 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.