ஐதராபாத்:
தெலுங்கானா மாநில சாலை போக்கு வரத்து கழகத்தின் பெண் நடத்துநர் தற்கொலை செய்துகொண்டார். அக்டோபர் 5இல் வேலை நிறுத்தம் தொடங்கிய பிறகு இது ஐந்தாவது தற்கொலை சம்பவமாகும்.சாத்துப்பள்ளி பணிமனையில் அரசுப்பேருந்து நடத்துநராக பணியாற்றுபவர் நீரஜா. வேலை நிறுத்தம் மேற்கொண்ட 48 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களை தெலுங்கானா மாநில அரசு பணிநீக்கம் செய்துள்ளது. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் வேதனை அடைந்த நீரஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை ஆணையர் தப்ஸீர் இக்பால் கூறினார். இரண்டு நாட்கள் முன்பு நல்கொண்டாவில் ஓட்டுநர் வெங்கடேச்சார்லு தற்கொலை செய்தார். அக்டோபர் 13இல் ஓட்டுநர் சுரேந்தர் கவுடா தீக்குளித்து தற்கொலை செய்தார். சம்பளம் வழங்காததால் இவரால்கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. அதைத் தொடர்ந்து பெரும் மனச்சோர்வடைந்த அவர் இந்த துயர முடிவை மேற்கொண்டார். இதுபோல் கம்மம் பணிமனையில் ஓட்டுநர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியும் தற்கொலை செய்துகொண்டார்.டிஎஸ்ஆர்டிசியை அரசுத்துறையாக நடத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இம்மாதம் 5 ஆம்தேதிமுதல் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வராதது மட்டுமல்லாது 48 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதனால் இதற்கு எதிரான போராட்டத்தில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.