புதுதில்லி:
பெண்களின் பாதுகாப்பு குறித்து சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதுமானதல்ல, அவற்றை அமல்படுத்த வேண்டிய அமைப்புகள் எதுவும் அச்சட்டங்களை அமல்படுத்துவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன் மாநிலங் களவையில் கூறினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும்நேரத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து உறுப்பினர்கள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தார்கள். அப்போது டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் திமுக உறுப்பினர் பி. வில்சன் முதலானவர்கள் கூறிய கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன். நாட்டில் வெளியாகும் அனைத்துப் பத்திரிகைகளும், குறிப்பாக மாநிலங்களில் வெளியாகும் மாநில மொழிப் பத்திரிகைகள், பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து ஏராளமாகச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பெண்களைப் போற்றிப் பாதுகாத்திட வேண்டும் என்கிற முறையிலான அறநெறிக் கல்வி இன்றைய தினம் இல்லை. அடுத்து, இது தொடர்பாக நாம் என்ன சட்டத்தை இயற்றினாலும் அவற்றை அமல்படுத்திட வேண்டிய புலனாய்வு அமைப்புகள் எதையும் முறையாக அமல்படுத்துவதில்லை. அதனால்தான் இதுபோன்ற அட்டூழியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் இதனை மேற்கொண்ட கயவர்களுக்கு எதிராக மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் செய்திகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயங்கள் குறித்து தலையங்கங்கள் தீட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் மத்தியில் அறநெறி மாண்புகளை உயர்த்தக்கூடிய விதத்தில் அவை அமைந்திட வேண்டும். இவ்வாறு ஊடகங்கள்செயல்பட்டால் அது நலம் பயக்கும்.இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.(ந.நி.)