புதுதில்லி:
ப. சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த தில்லி உயர்நீதி மன்ற நீதிபதி சுனில் கவுருக்கு மோடிஅரசு புதிய பதவி வழங்கியுள்ளது.ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், மத்திய முன்னாள் நிதி யமைச்சர் ப. சிதம்பரம் தில்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் கவுர், தீர்ப்பைத் தள்ளிவைத்துக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.பின்னர், ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த வழக்கில் அவசர அவசரமாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சுனில் கவுர், ‘இதுபோன்ற கடுமையான பொருளாதாரக் குற்ற வழக்குகளுக்கு முன்ஜாமீன் வழங்குதல் என்ற முறையையே சட்டத்திலிருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற இதுதான் சரியான நேரம். இந்த வழக்கில் ப.சிதம்பரம் கிங்பின் (King pin) ஆகச் செயல்பட்டிருக்கிறார்’ என்றெல்லாம் குறிப்பிட்டு சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிக்கையை நிராகரித்தார்.அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 21-ஆம் தேதி இரவு, சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.இந்நிலையில் பணிஓய்வு பெற்ற சுனில் கவுருக்கு, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத் தலைவர் பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. செப்டம்பர் 23-ஆம் தேதி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக அவர் பதவியேற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
நீதிபதி சுனில் கவுர், ப. சிதம்பரத் திற்கு எதிராக மட்டுமல்லாமல், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை விசாரிப்பதற்கும் அனுமதி வழங்கியவர் ஆவார். அண்மையில், மத்தியப் பிரதேசகாங்கிரஸ் முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதூல் பூரிக்கு அகஸ்டாவெஸ்ட்லேண்ட் வழக்கில் முன்ஜாமீன் மறுத்து உத்தரவிட்ட தும் சுனில் கவுர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.