தில்லி
நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியில் கொரோனா பரவல் வேகமாக உள்ளது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு தீவிர நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது.
இந்நிலையில் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை காரணம் காட்டி கொரோனா சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது,"கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவு வென்டிலேட்டர்களும், படுக்கைகளும் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை வசதிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஸ்மார்ட்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. படுக்கை வசதிகள் காலியாக இருந்தாலும் சில தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், படுக்கை வசதியை காரணம் காட்டி கொரோனா சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக கருப்புச் சந்தை மூலமாக குறுக்கு வழியில் மருத்துவமனையில் படுக்கை வசதியைப் பெற முயற்சிப்பவர்களை மன்னிக்க முடியாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.